ரயில்களில் மது அருந்தினால்.. இனி பெரிய சிக்கல்.. சரக்கடித்தவர்களை தேடிவரும் போலீஸ்
சென்னை: ரயில்களில் பயணம் செய்யும் போது, மது அருந்தக்கூடாது. மது அருந்தினால் பயணிகளை டிக்கெட் பரிசோதகர் உடனடியாக வெளியேற்ற முடியும். அத்துடன் அபராதம் மற்றும் சிறை தண்டனையும் விதிக்க முடியும். இந்நிலையில், அண்மை காலத்தில் ரயிலில் மதுபோதையில் செல்லும் பயணிகளால் தொல்லை ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து மது போதையில் செல்வோரை மடக்கிப்பிடிக்க ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதன்படி, சந்தேகப்படும் நபர்களுக்கு சுவாச பகுப்பாய்வு சோதனை நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.
பேருந்து கட்டணத்தை விட ரயில்களில் கட்டணம் குறைவு என்பதால் பலரும் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். இதனால் ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேநேரம் ஒரு சில பயணிகள் மது அருந்து விட்டு பயணம் செய்வதால் பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

மதுபோதையில் கட்டுப்பாட்டை இழக்கும் போதை ஆசாமிகள் சில சமயங்களில் சக பயணிகளிடம் தேவையில்லாமல் சண்டை போடுகிறார்கள். கத்தி பேசுவது, அபாயகரமான ஆள் போல் நடந்து கொள்வது, ஆபாசமாக கத்தி கத்தி பேசுவது, யாராவது தவறு என்று கேட்டால் சண்டைக்கு போவது போன்ற காரியங்களை செய்கிறார்கள். அத்துடன் மோசமான மது வாடையில் பயணிகள் பயணிக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. இப்படியான பாதுகாப்பு குறைபாடு முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் அதிகரித்து வருகிறது.
இது ஒருபுறம் எனில், ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்யும் நபர்களுமே தற்போது சர்வ சாதாரணமாக ரயில் பெட்டியிலேயே அமர்ந்து மது அருந்துவதாக பயணிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதுபோன்ற சம்பவங்களால் ரெயிலில் பயணிக்கும் குழந்தைகள், பெண்கள், முதியோர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவது அதிகரித்துள்ளது. இது தொடர்பான புகார்கள் அதிகரித்து வருகிது. எனவே மது போதையில் பயணம் செய்பவர்களுக்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் தற்போது தீவிரமாக அபராதம் விதித்து வருகின்றனர்.
பொதுவாகவே மது போதையில் ரயில் பயணம் மேற்கொள்வது ரயில்வே பாதுகாப்பு சட்டம் 145-ஏ-படி தண்டனைக்குரிய குற்றமாகும். அவர்களுக்கு, ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் வசூலிக்கப்படும் அல்லது 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படுவது வழக்கம். தமிழ்நாட்டில் நடப்பாண்டில் மட்டும் மதுபோதையில் பயணம் செய்த 135 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. இதில், சென்னையில் மட்டும் 21 பேர் சிக்கினர்.
இனிவரும் காலங்களில் புகாரின் பேரில் மட்டுமல்லாமல் மதுபோதையில் பயணம் செய்யும் அனைவருக்கும் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, ரயிலில் சந்தேகப்படும் படி பயணம் செய்பவர்களிடம் சுவாச பகுப்பாய்வு (ப்ரீத் அனலைசர்) கருவிகள் மூலம் சோதனை செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட இருக்கிறது. இதன்மூலம் மதுபோதையில் பயணம் செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகள், ரயில் பயணத்தின் போது ஏதாவது இடையூறுகளை சந்தித்தால் உடனடியாக 139 என்ற ரயில்வே பாதுகாப்பு உதவி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications