ஏப்ரல் முதல் 342 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன.. பின்னணியில் யார்? - சென்னை காவல் ஆணையர் தகவல்
சென்னை: சென்னையில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து 7 மாதங்களில் 342 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் தெரிவித்துள்ளார். அனைத்து வெடிகுண்டு மிரட்டல்களுமே தீவிரமாக விசாரிக்கப்பட்டுள்ளன சென்னை காவல் ஆணையர் கூறியுள்ளார்.
டார்க் வெப் பிரவுசர்கள் மூலம் மெயில்கள் அனுப்பப்படுவதால் மர்ம நபர்களை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து தற்போது தமிழ்நாடு காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு (ATS) விசாரணை நடத்தி வருகிறது என சென்னை காவல் ஆணையர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு இடங்களுக்கும் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. மத வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் வீடு, தலைமைச் செயலகம், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீடு, நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீடு, அமெரிக்க தூதரக அலுவலகம், சென்னை விமான நிலையம் என பல இடங்களுக்கும் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.
சென்னையில் உள்ள குடியரசு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணனின் வீட்டுக்கு இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
அண்மையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கும், சென்னை தி.நகர் திலக் தெருவில் உள்ள பாமக அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
நேற்று டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மின்னஞ்சலில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீடு, மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நடிகர் அஜித்குமாரின் வீடு மற்றும் நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோரின் வீடு உட்பட 10 இடங்களைக் குறிப்பிட்டு அங்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
உடனே போலீசார் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் மிரட்டலுக்குள்ளான இடங்களுக்கு சென்று சோதனை நடத்தினர். பல மணி நேர சோதனைக்குப் பிறகும் சந்தேகப்படும்படியான எந்தப் பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. இதையடுத்து, புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று சென்னையில் அமைச்சர் சேகர்பாபு வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீடுகளுக்கும் இன்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல்கள் வரும்போதெல்லாம், தீவிரமாக இறங்கி சோதனை நடத்தி, புரளி என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே, பரபரப்பு அகல்கிறது.
இந்நிலையில் தான், சென்னையில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து கடந்த 7 மாதங்களில் 342 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் தெரிவித்துள்ளார். அனைத்து வெடிகுண்டு மிரட்டல்களுமே தீவிரமாக விசாரிக்கப்பட்டுள்ளன சென்னை காவல் ஆணையர் கூறியுள்ளார்.
மேலும், டார்க் வெப் பிரவுசர்கள் மூலம் மெயில்கள் அனுப்பப்படுவதால் மர்ம நபர்களை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. IP முகவரியை மறைக்கும் VPN அல்லது TOR மூலமாக இங்கிருந்தே அனுப்பப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இதுபோன்ற மிரட்டல்களில் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து வருவதுபோல் தெரியவில்லை. இங்கிருந்து யாரோ செய்வதாகக் கருதுகிறோம். மிரட்டும் முறை, பயன்படுத்தும் வார்த்தை உள்ளிட்டவற்றை வைத்து பார்க்கும்போது ஒன்று அல்லது 2 பேர் மட்டுமே இதன் பின்னணியில் உள்ளனர். இருப்பினும் இதை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை.
வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து தற்போது தமிழ்நாடு காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவும் (ATS) விசாரணை நடத்தி வருகிறது, விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications