Chennai: இந்த மனசு யாருக்கு வரும்.. ஊழியர்களுக்கு Audi கார் கொடுத்து அழகு பார்க்கும் சிஇஓ தினேஷ்!
சென்னையைச் சேர்ந்த ரிஃபெக்ஸ் குழுமம் தனது நிறுவனத்தில் பணியாற்றும் 12 ஊழியர்களுக்கு 12 ஆடி கார்களை பரிசாக வழங்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் பல நிறுவனங்களின் பணிநீக்கம், சம்பள குறைப்பு, சம்பள உயர்வில் தாமதம் என பல பிரச்சனைகள் இருந்து வரும் வேளையில், இந்த சென்னை நிறுவனத்தின் செயல் ஊழியர்களுக்கு பெரும் வியப்பை அளித்துள்ளது.

ரிஃபெக்ஸ் குழுமம்:
ரிஃபெக்ஸ் குழுமம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு பெரிய குழுமம். கடந்த 20 ஆண்டுகளில் இது பல்வேறு துறைகளில் விரிவடைந்துள்ள இக்குழுமம் தற்போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சாம்பல் பயன்பாடு மற்றும் நிலக்கரி கையாளுதல், மெடிக்கல் இமேஜிங், மருந்துத் தொழில், போக்குவரத்து சேவைகள், விமான நிலைய ரீடைல் வியாபாரம் உள்ளிட்ட பல துறைகளில் இந்தக் குழுமம் செயல்பட்டு வருகிறது.
இக்குழுமத்தின் கீழ் ரிஃபெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் ரிஃபெக்ஸ் ரினியூவபிள்ஸ் & இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் ஆகிய இரண்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அனில் ஜெயின் மற்றும் குழும CEO தினேஷ் அகர்வால் ஆகியோர் தலைமையில் இக்குழுமம் வளர்ந்து வருகிறது.
ஊழியர்களுக்கு ஆடி கார் பரிசு
ரிஃபெக்ஸ் குழுமம் தனது நிறுவனத்தில் நீண்டகாலமாக பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் சிறப்பாகப் பணியாற்றும் ஊழியர்கள் என்ற இரு பிரிவின் சுமார் 12 ஊழியர்களை சேர்வு செய்து ஆடி A4 கார்களை பரிசாக வழங்கியுள்ளது. இந்தக் கார்கள் வெறும் உயர் அதிகாரிகளுக்கு மட்டும் அல்ல, நிறுவனத்தின் பயணத்தில் நீண்டகாலம் பங்களித்த ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆடி A4 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.47 லட்சம் முதல் ரூ.56 லட்சம் வரை உள்ளது. இந்தப் பரிசு, ஊழியர்களின் விசுவாசம் மற்றும் உழைப்புக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.

இந்திய நிறுவனங்களில் மாற்றம்
இந்தியாவில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு பணப் பரிசு மட்டுமல்லாமல், உயர் மதிப்புள்ள பொருட்களை பரிசாக வழங்கும் போக்கு அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் குஜராத்தில் வைர வியாபாரிகள் தான் கார், வீடு என பரிசுகளை அள்ளி கொடுப்பார்கள்.
ஆனால் தற்போது சென்னையை சேர்ந்த பல நிறுவனங்கள் பரிசார வழங்குவது அதிகரித்துள்ளது. இத்தகைய முயற்சியை நிறுவனங்கள் திறமையான ஊழியர்களைத் தக்கவைக்கவும், அவர்களின் உழைப்பை ஊக்குவிக்கவும் உதவுவதாக தெரிவிக்கின்றனர்.
இந்தச் செய்தி அன்சீன் சென்னை என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோ மூலம் வைரலானது. வீடியோவில் ஆடி கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருப்பது பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது.












Click it and Unblock the Notifications