சென்னையை தலைகீழாக மாற்றப்போகும் திட்டம்.. 1 மணி நேர பயணம்.. வெறும் 15 நிமிடமாக குறையும்!
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலை ( ecr) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை (omr) ஆகிய சாலைகளை இணைத்து போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு ஒரு புதிய திட்டத்தினை சிஎம்டிஏ ஒரு திட்டம் தயாரித்துள்ளது. 1000 கோடி செலவில் உருவாக உள்ள இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஓஎம்ஆர், ஈசிஆரில் தற்போது உள்ள ஒரு மணி நேர பயணம் வெறும் 15 நிமிடத்தில் சாத்தியமாகும் என்கிறார்கள்.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) சென்னை கிழக்கு கடற்கரை சாலை ( ecr) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை (omr) ஆகிய சாலைகளை இணைப்பது குறித்து விரிவான திட்ட அறிக்கையை 2.3 கோடி ரூபாயில் தயாரித்து தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க உள்ளது.

என்ன திட்டம்: சென்னை அடையாறு ஆற்றில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பாலம் மூலம் ஈசிஆர் சாலையில் உள்ள திருவான்மியூர் மற்றும் ஓம்ஆர் சாலையில் உள்ள துரைபாக்கத்தை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
15 நிமிடத்தில் பயணம்: 1000 கோடி செலவாகும் என உத்தேச மதிப்பிடப்பட்டுள்ள இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலையில் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் குறையும். ஈசிஆர் மற்றும் ஓம் ஆர் சாலைகளில் தற்போது ஒரு மணி நேரம் ஆகும் பயணம், இந்த திட்டத்திற்கு பின் வெறும் 15 நிமிட நேரமாக குறையும் என்று சிஎம்டிஏ அதிகாரிகள் கூறியுள்ளனர்,
இந்த திட்டம் குறித்த அறிக்கையை ஏற்கனவே தமிழக அரசின் ஒப்புதலுக்காக சிஎம்டிஏ (சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ) அனுப்பி உள்ளது. தமிழக அரசு இசிஆர் ஓஎம்ஆர் சாலைகளை இணைக்கும் திட்டத்திற்கு அடுத்த சில மாதங்களில் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம் ஒப்புதல் அளிக்கப்பட்டால், அடுத்த 3 வருடங்களில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடையாறு ஆற்றில் மேம்பாலத்தில் உருவாகும் இந்த சாலை திட்டம் நிறைவு பெற்றால், தென் சென்னை பகுதியின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமையும்.

சென்னையின் மிக முக்கியமான விஐபி சாலைகள் என்றால் அது ஈசிஆர் மற்றும் ஓம்ஆர் சாலைகள் தான். இங்கு தான் ஐடி கம்பெனிகள் மொத்தமாக அமைந்துள்ன. கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்லாயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்திருக்கின்றன. முட்டுக்காடு, கோவளம், மகாபலிபுரம், திருப்போரூர், பாண்டிச்சேரி என மிகப்பிரபலமான சுற்றுலாத்தளங்களையும் இந்த இரண்டு சாலைகள் தான் இணைக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாக ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளில் காலை மற்றும் மாலை வேலைகளில் சென்றால் மிக மோசமான அனுபவமாக இருக்கும். திருவான்மியூரில் இருந்து துரைபாக்கத்தை அடைந்து பள்ளிக்கரணை ரேடியல் ரோட்டை தொடுவதற்கு பலருக்கு உயிர் போய் உயிர் வந்துவிடும். சிறுசேரி சிப்காட் தொடங்கி அடையாறு வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

எனவே ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளை இணைக்கும் இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால் இரு சாலைகளிலுமே போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும். பயண நேரமும் ஒரு மணி நேரத்தில் இருந்து வெறும் 15 நிமிடமாக குறையும்.தென் சென்னை பகுதிகள் வணிக ரீதியாக வளர்ச்சி பெற உதவும்.
குறிப்பிட்ட காலம் மற்றும் பட்ஜெட்டிற்குள் இந்த திட்டத்தை முடிக்க முடியும் என்று சிஎம்டிஏ நம்புகிறது. இந்த திட்டத்தால் தென்சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும் என்றும் சிஎம்டிஏ தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications