விசாரணை முடிந்தது..கருக்கா வினோத்துக்கு நவம்பர் 15 வரை நீதிமன்ற காவல்.. சைதாப்பேட்டை கோர்ட் அதிரடி
சென்னை: 3 நாள் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான கருக்கா வினோத்துக்கு நவம்பர் 15ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில் தான் கடந்த மாதம் 25ம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இந்த பெட்ரோல் குண்டு ஆளுநர் மாளிகையின் வாசல் முன்பு விழுந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக வெடிக்கவில்லை. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிவிட்டு அங்கிருந்து ஓடிய நபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் கருக்கா வினோத் என்பதும் ஏற்கனவே அவர் சென்னை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதானவர் என்பதும் தெரியவந்தது.
மேலும் அந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த அவர் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதும் தெரியவந்தது. அதோடு அவர் மீது மேலும் சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது 5 பிரிவுகளில் கிண்டி போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீட் தேர்வை ரத்து செய்யாமல் இருப்பது மற்றும் நீண்டநாள் சிறைவாசம் அனுபவிக்கும் கைதிகளை விடுவிக்க ஒப்புதல் வழங்காதது உள்ளிட்ட காரணங்களால் கருக்கா வினோத் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தான் கருக்கா வினோத்தை 15 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கிண்டி போலீசார் மனு செய்தனர். இந்த மனுவை விசாரணையின்போது கருக்கா வினோத் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். நீதிமன்றம், கருக்கா வினோத்தை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது. இதையடுத்து போலீசார் அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர்.
இன்றுடன் கருக்கா வினோத்தின் போலீஸ் காவல் முடிவுக்கு வந்தது. இதையடுத்து அவரை இன்று போலீசார் சைதாப்போட்டை நீதிமன்ற 9வது அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து கருக்கா வினோத்துக்கு நவம்பர் 15ம் தேதி வரை நீதிமன்றம் காவலில் சிறையில் அடைக்க பொறுப்பு நீதிபதி சந்தோஷ் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
முன்னதாக கடந்த முறை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தபோது அவர் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோஷமிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் இந்த முறை அவரை பேசவிடாமல் போலீசார் கட்டுக்கோப்பாக நீதிமன்றம் அழைத்து வந்து ஆஜர்ப்படுத்தி புழல் சிறைக்கு கொண்டு சென்றனர்.


Click it and Unblock the Notifications
