அப்போ குரல் கொடுத்த சனம் ஷெட்டி, சின்மயி, மதுவந்தி எங்கே? தூய்மைப் பணியாளர்கள் கண்ணீர் போராட்டம்!
சென்னை: சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை வளாகத்திற்குள், உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் 400-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை மாலை அதிரடியாக நுழைந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தங்கள் பணிகளைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தினக்கூலியை ரூ.751-ல் இருந்து ரூ.832 ஆக உயர்த்த வேண்டும், 3-வது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு, மாதவிடாய் கால விடுப்பு, மற்றும் 2025 போராட்டங்களின் போது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் ஒலித்த குரல்கள்: அன்று காட்டிய ஆவேசம் எங்கே?
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் தங்களது உரிமைக்காகப் போராடியபோது, சமூக வலைதளங்களிலும் பொதுவெளியிலும் அது மிகப்பெரிய விவாதமாக வெடித்தது.
குறிப்பாக, பாடகி சின்மயி, நடிகை சனம் ஷெட்டி, நடிகை அம்பிகா மற்றும் மதுவந்தி உள்ளிட்ட பல பிரபலங்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கினர். "தூய்மைப் பணியாளர்களின் உழைப்பைச் சுரண்டக் கூடாது", "அரசு உடனடியாக அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்", "அடிமட்டத் தொழிலாளர்களின் கண்ணீருக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்" எனப் பலரும் சமூக வலைதளங்களில் தொடர் பதிவுகளை வெளியிட்டு, அன்றைய ஆளும் அரசை நோக்கி சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.
ஆனால், தற்போதைய தவெக தலைமையிலான விஜய் ஆட்சியில், அதே தூய்மைப் பணியாளர்கள் இன்னும் தீவிரமான கோரிக்கைகளுடன் தெருவில் இறங்கிப் போராடும் நிலையில், அன்று குரல் கொடுத்த எந்தவொரு பிரபலமும் தற்போது களம் காணாமல் மௌனம் காப்பது சமூக வலைதளங்களில் பொதுமக்களிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரிப்பன் மாளிகையில் நடந்தது என்ன?
நேற்று முதல்நாள் கலைவாணர் அரங்கில் பள்ளி கல்வித்துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைதியான முறையில் தினமும் 2 மணி நேரம் கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்திக் கொள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் வாய்மொழி அனுமதி வழங்கியதாகத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
ஆனால், செவ்வாய்க்கிழமை தொழிலாளர்கள் ரிப்பன் மாளிகைக்கு வந்தபோது பிரதான நுழைவு வாயில்கள் காவல்துறையினரால் அடைக்கப்பட்டன. ஆணையரைச் சந்தித்து விளக்கம் கேட்க முயன்றும் கதவுகள் திறக்கப்படாததால், ஆத்திரமடைந்த 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கதவுகளைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்து வளாகத் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
"நாங்கள் காவல்துறைக்கு எந்த இடையூறும் செய்ய விரும்பவில்லை. விக்டோரியா ஹால் அருகேயுள்ள கிழக்கு வாசல் பகுதியில் 2 மணி நேரம் மட்டுமே கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்த அனுமதி கோருகிறோம். மற்ற சங்கங்கள் வளாகத்தில் கூட அனுமதிக்கப்படும்போது, எங்களை மட்டும் எங்கு கூடினாலும் போலீசார் கைது செய்கிறார்கள்" என்று உழைப்போர் உரிமை இயக்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
11 அம்சக் கோரிக்கைகள் - 4 கோரிக்கைகளை மட்டும் பரிசீலிக்க அரசு ஒப்புதல்
உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் முன்வைக்கப்பட்ட 11 கோரிக்கைகளில், 3-வது குழந்தைக்கான 1 ஆண்டு மகப்பேறு விடுப்பு, உள்ளாட்சி மற்றும் கிராமப்புறப் பள்ளி தூய்மைப் பணியாளர்களுக்கு மாதவிடாய் விடுப்பு, தினக்கூலியை ரூ.751-ல் இருந்து ரூ.832 ஆக உயர்த்துதல், ஏற்கனவே ஏற்கப்பட்ட 1,400 தொழிலாளர்களில் விடுபட்ட 13 பேரை மீண்டும் பணியில் சேர்த்தல், தொழிற்சங்க அலுவலக இடம் மற்றும் உணவுப்படி, ஆகிய 4 கோரிக்கைகளை மட்டும் அரசு பரிசீலிக்க முன்வந்துள்ளது.
ஆனால், மிக முக்கியமான கோரிக்கைகளான ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்தல், வார விடுமுறை, தரமான குடியிருப்புகள், தொழிலாளர்களுக்குச் சாதகமான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரசு தொடர்ந்த உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கைத் திரும்பப் பெறுதல் மற்றும் 2025 போராட்டக் குற்ற வழக்குகளைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 7 கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாததால் தங்களது தொடர் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனத் தொழிலாளர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
