நேற்று மழை.. இன்று தகிக்கும் சென்னை.. இந்தாண்டு கத்திரியில் முதல் முறையாக வெப்பநிலை 107F!
சென்னை: சென்னையில் இன்று 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கோடை காலம் மார்ச் மாதமே வெயில் தொடங்கிவிட்டது. கடந்த 4 ஆம் தேதி முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. பொதுவாக கோடை வெயில் தொடங்கினாலே வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தொடும்.
இந்த நிலையில் கத்திரி வெயிலால் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இத்தனை நாட்களாக 35, 36, 37 டிகிரி செல்சியஸே வெப்பம் பதிவாகியிருந்தது.

லேசான வெயில்
இந்த நிலையில் நேற்று இரவு சென்னையில் பெரும்பாலான இடங்களில் ஆம்பன் புயலால் ஓரளவு மழை பெய்தது. இதனால் இன்று குளிர்ச்சி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. காலை முதல் ஜில்லென்ற காற்று ஓங்கி வீசியது. நடுநடுவே லேசான வெயிலும் தலை காட்டியது.

வெயில் சுட்டெரிக்கும்
இந்த நிலையில் நேரம் ஆக ஆக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. தற்போது சென்னையில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கோடையில் தற்போதுதான் முதல்முறையாக 107 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதுபோன்ற சுட்டெரிக்கும் வெயில் அடுத்த 5 நாட்கள் வரை இருக்கும் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வெப்பம்
ஆம்பன் புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை. தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிகமாகவே வெப்பம் இருக்கும் என கூறப்படுகிறது.

கவலை
மலைக்கோட்டை திருச்சி, கோட்டை நகரம் வேலூர் , அரக்கோணம், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளிலும் வெப்பம் தகித்து வருகிறது. இதனால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கொரோனா ஊரடங்கால் வீடுகளில் இருந்த நிலையில் தற்போது சில தளர்வுகள் கொடுக்கப்பட்டும் வெயிலால் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளதே என நினைத்து மக்கள் கவலையடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications