மோசடி வழக்கு..திடீரென எழுந்த கேள்வி..செந்தில் பாலாஜி வழக்கை அக்டோபர் 31க்கு ஒத்திவைத்த நீதிமன்றம்!
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இன்று விசாரணைக்கு வந்த வழக்கை திடீரென்று நீதிமன்றம் அக்டோபர் 31ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
தமிழகத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் கடந்த 2011-15-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜி உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. இதையடுத்து அமலாக்கத்துறை சோதனை நடத்தி செந்தில் பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதனால் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக உள்ளார்.
இது ஒருபுறம் இருக்க போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த வழக்கில் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்பட பலர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கில் சமீபத்தில் சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதன்பிறகு கூடுதல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி இந்த வழக்கில் குற்றம்சாட்டபட்டவர்களில் இன்னும் சிலரை விசாரிக்க அனுமதி மற்றும் ஒப்புதல் கடிதம் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, குற்றப்பத்திரிகையில் சில சந்தேகங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மத்திய குற்றபிரிவு போலீசாரிடம் குற்றப்பத்திரிகையில் உள்ள தகவல்கள் குறித்து சில விளக்கங்களை நீதிபதி கேட்டார். மேலும் அதற்கு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 31ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications