அதிமுக ஆட்சி காலத்தில் ஊழல்: மாஜி அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 வருட சிறை- சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: அதிமுக ஆட்சியின்போது நடைபெற்ற ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 1991 -1996 அதிமுக ஆட்சியின்போது, அதாவது ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, இலவச வேஷ்டி, சேலை, பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச செருப்பு வழங்கியதில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்குகளில் அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் இந்திரகுமாரி உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்திரகுமாரி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. 1997ம் ஆண்டு சமூக நலத்துறையின் செயலாளராக லட்சுமி பிரானேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குற்றச்சாட்டு
அதிமுக ஆட்சி காலத்தில் சமூகநலத்துறை அமைச்சராக இருந்த இந்திரகுமாரி, சமூக நலத்துறையின் முன்னாள் செயலாளர் கிருபாகரன் ஐ.ஏ.எஸ்., ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறையின் முன்னாள் இயக்குனர் சண்முகம் ஐ.ஏ.எஸ். இந்திரகுமாரியின் கணவரும், வழக்கறிஞருமான பாபு,இந்திரகுமாரியின் உதவியாளர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் மீது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அரசு பணம் முறைகேடு
இந்த வழக்கில் சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை சி.பி.சி.ஐ.டி போலீசார் தாக்கல் செய்தனர். அதில், ஊழல் செய்யும் நோக்கத்தில் 1992-96ம் ஆண்டுகளில் பாபுவை நிர்வாக அறங்காவலராக மதர் இந்தியா என்ற அறக்கட்டளையும் பரணி சுவாதி என்ற பெயரில் கல்வி அறக்கட்டளையும் தொடங்கி,அரசிடம் பணம் பெற்றனர். காது கேளாதோர் பள்ளியும், ஊனமுற்றோர் பள்ளிகளையும் தொடங்குவதாகக் கூறி அரசுப்பணத்தில் ரூ.15.45லட்சம் மோசடி செய்துள்ளனர். ஆனால் பள்ளியே இல்லை.

சிறப்பு நீதிமன்றம்
இந்திரகுமாரி, கிருபாகரன், சண்முகம் ஆகியோர் அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி சுயலாபம் அடைந்துள்ளனர். இவர்கள் செய்த ஊழலுக்கு பாபு, வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் உடந்தையாக இருந்ததால் இவர்கள் அனைவரையும் இந்திய தண்டனைச்சட்டம், ஊழல் தடுப்புச்சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. பின்னர் இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்பி எம்எல்ஏக்கள் வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்திரகுமாரி குற்றவாளி
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில், முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மற்றும் சண்முகம் பாபு உள்ளிட்டோர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி அலிசியா தெரிவித்தார். இதன்பிறகு சுமார் அரை மணி நேரம் கழித்து தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. இதன்படி இந்திரகுமாரிக்கும், அறங்காவலராக இருந்த அவரது கணவர் பாபுவிற்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஐஏஎஸ் அதிகாரி சண்முகத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுக்கு கீழேயுள்ள தண்டனை என்றால் தீர்ப்பை நிறுத்தி வைத்து மேல்முறையீடு செய்ய முடியும். ஆனால் இவர்களுக்கு 5 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்திரகுமாரி மற்றும் அவரது கணவர் பாபு சிறைக்கு போக வேண்டியிருக்கும். பிறகு மேல்முறையீடு செய்ய வேண்டுமானால் அவர்கள் செய்ய முடியும். திமுகவில் இந்திர குமாரி இணைந்தபோதிலும், பழைய குற்றத்திற்கான தண்டனை அவரை விடாமல் துரத்தி பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications