தாசில்தார் வந்துட்டாரு.. வாடகை பாக்கி வைத்த கோவிலுக்கு சொந்தமான 40 கடைகளுக்கு சீல்.. பரபரத்த சென்னை
சென்னை: கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கடைகளை வைத்துள்ளோர், வாடகை பாக்கியை அரசுக்கு செலுத்தி வரும்நிலையில், ஒருசிலர் நிலுவையிலேயே வைத்திருக்கிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட கடைகள் மீது, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில், இன்று சென்னையிலும், கோர்ட் உத்தரவுப்படி 40 கடைகள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
தமிழக இந்து சமய அறநிலையத்துறையை பொறுத்தவரை, பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரகின்றன. அதில் குறிப்பாக கோயில் திருப்பணி, திருத்தேர், அடிப்படை வசதிகள் மேம்பாடு, பணியாளர்கள் நலத்திட்ட உதவிகள், ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த நிர்வாக நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக, கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் மனைகளின் குத்தகை மற்றும் வாடகை நிலுவை தொகையையும் வசூல் செய்து வருகிறது.
வாடகைதாரர்கள்: இதில், அதிகபட்ச நிலுவை உள்ளவர்களின் கடைகளுக்கு மட்டும் சீல் வைக்கப்படுகிறது.. இதனால், தங்கள் நிலுவைகளை குறைத்து கொள்வதற்காகவே வாடகைதாரர்களும், வாடகையை முனைந்து கட்டுவதில் தீவிரம் செலுத்தி வருகிறார்கள். இப்படி நிலுவை தொகைகளை உடனடியாக செலுத்திவிடுவதால், கோயிலுக்கு வருவாய் பெருகி, திருப்பணி மற்றும் வளர்ச்சிக்கு உதவமுடிகிறது.
எனினும், கடைகளில் வாடகைக்கு இருந்து வரும் வியாபாரிகள் சிலர், பல ஆண்டுகளாகவே வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். இதையடுத்து அதிக அளவில் வாடகை பாக்கி வைத்திருந்த கடைகளுக்கு சீல் வைத்து, அதனை கையகப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கடை வாடகை: அந்தவகையில், சென்னையிலும் இன்று அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் வகையறா கோயிலுக்கு சொந்தமான இடத்தில் நகைக்கடை, துணிக்கடை, முடி திருத்தும் கடை உள்பட 40க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.. இவர்கள் மாதந்தோறும் இந்துசமய அறநிலைத் துறைக்கு வாடகையை சரியாக கட்டி வந்தனர். ஆனால், கடந்த பல வருடங்களாக 5 கோடி ரூபாய் வரை வாடகை பாக்கி வைத்துள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பாக அறநிலைத்துறை அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் வழங்கியும், கடைக்காரர்கள் வாடகை பாக்கியை செலுத்தவில்லையாம்.. இங்கு கடை நடத்தி வரும் வியாபாரிகள், கடந்த 2001ம் ஆண்டு முதலே வாடகை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளார்களாம்.
எனவே இது தொடர்பாக, அறநிலையத்துறை சார்பில், கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்தநிலையில், அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள கடைகளை அகற்றி சீல் வைக்கவேண்டும் என்று கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது..
தாசில்தார்: நீதிமன்றம் உத்தரவின்படி, இன்று காலை அறநிலையத்துறை உதவி ஆணையர் பாரதிராஜா, அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் உஷா, அமைந்தகரை தாசில்தார் மாரியம்மாள், அறநிலையத்துறை செயல் அலுவலர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கடைகளுக்கு சீல் வைக்க வந்தார்கள்.
அதிகாரிகள் திரண்டு வருவதை கண்ட, அங்கிருந்த கடைக்காரர்கள் அவர்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.. கடைகளுக்கு சீல் வைக்கக்கூடாது என்று கூறி, அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்... இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட துவங்கியது.
சமாதானம்: எனினும், பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் வந்து கடைக்காரர்களை சமாதானப்படுத்தினார்கள்.. "கோர்ட் உத்தரவிட்டதால்தானே அதிகாரிகள் வந்திருக்கிறார்கள்? கோர்ட் ஆர்டரின்படிதானே கடைகளுக்கு சீல் வைக்க வந்துள்ளார்கள்... அதனால் எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது" என்று கடைக்காரர்களை சமாதானம் செய்தனர்..
இதையடுத்து, அறநிலையத்துறை அதிகாரிகள், அங்குள்ள 40க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைத்துவிட்டு சென்றார்கள். இதனால் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்ட நிலையில், அங்கு சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications