மதுரவாயல், போரூர், அய்யப்பன்தாங்கலில் ராத்திரி ஆனாலே இதே வேலை.. அதிர வைத்த இளைஞர்கள்
சென்னை: சென்னை மதுரவாயல், போரூர் பகுதிகளில் இரவு நேரங்களில் 'லாக்கை' உடைத்து மோட்டார் சைக்கிள்களை திருடி கிராமங்களில் விற்ற 3 இளைஞர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தார்கள்.
சென்னை மதுரவாயல், போரூர், அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்கு வெளியே நிறுத்தி இருக்கும் விலை உயர்ந்த மற்றும் நடுத்தர மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருடு போவது தொடர்கதையாக இருந்தது. லாக்கை உடைத்து தங்கள் பைக்குகளை மர்ம நபர்கள் திருடுவதாக பலர் மதுரவாயல் போலீசாருக்கு புகார்கள் அளித்து வந்தனர்.

இந்த புகார்கள் தொடர்பாக இன்ஸ்பெக்டர் பூபதிராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். ஒரே கும்பலே தொடர்ந்து இந்த திருட்டு வேலைகளை செய்து வருவதாக போலீசார் சந்தேகித்தனர். திருட்டு நடந்த இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து திருடர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில் அய்யப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த தங்கராஜ் (வயது 22), மாங்காட்டைச் சேர்ந்த ஸ்ரீநாத் (22), திருவேற்காட்டைச் சேர்ந்த தீபன் (20) ஆகிய 3 பேரை மதுரவாயல் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இவர்கள் 3 பேரும் மதுரவாயல், போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளின் வெளியே நிறுத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்து ஒரே வகையான 13 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தங்கராஜ், ஸ்ரீநாத் , தீபன் ஆகிய 3 பேரும் மதுரவாயல், போரூர் உள்ளிட்ட பகுதியில் இரவு நேரங்களில் தனியாக அல்லது ஒன்றாக நிற்கும் மோட்டார் சைக்கிள்களை தொடர்ந்து சில நாட்கள் நோட்டமிடுவார்கள். அப்போது வீடுகளுக்கு வெளியே நிறுத்தி இருக்கும் ஒரே வகையான மோட்டார் சைக்கிள்களை அதன் 'லாக்கை' உடைத்து திருடிச்சென்று விடுவார்களாம்.
இந்த திருட்டு மோட்டார் சைக்கிள்களை சென்னையில் விற்றால் போலீசாரிடம் மாட்டிக்கொள்வார்கள் என்பதால் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதனை தாண்டி உள்ள கிராமங்களுக்கு கொண்டு சென்று விவசாயம் செய்பவர்கள் மற்றும் மாடுகள் வைத்திருக்கும் கிராமத்து அப்பாவிகளை அடையாளம் கண்டு அவர்களிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications