முகம் மாறுது கிளாம்பாக்கம்.. மாஸ் காட்ட போகும் மஹிந்திரா சிட்டி! ஜிஎஸ்டி ரோட்டில் சர்ருனு பறக்கலாம்!
சென்னை: சென்னையின் புறநகர் பகுதிகளில் தினசரி வாகன நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்த நெரிசலைக் குறைக்கும் முக்கியமான திட்டம் ஒன்று இந்த ஆண்டிலேயே தொடங்கப்படவுள்ளது. சென்னையில் கிளாம்பாக்கம் முதல் மஹிந்திரா சிட்டி வரையிலான புதிய மேம்பாலம் NHAI மூலம் அமைக்கப்படுகிறது. 18.4 கி.மீ நீளத்தில் அமையவுள்ள மேம்பாலச் சாலையின் அகலம் 25 மீட்டராக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்திய மறுஆய்வுக்குப் பிறகு, மத்திய அரசு இதன் அகலத்தை 29 மீட்டராக அதிகரித்துள்ளது. இதனால், சாலை போக்குவரத்திற்கான இடவசதி அதிகரித்து, நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த புதிய மேம்பாலச் சாலை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மஹிந்திரா சிட்டி வரை 18.4 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்படுகிறது. மொத்தம் ரூ.3,300 கோடி செலவில் உருவாகும் இந்தத் திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) செயல்படுத்துகிறது.
மேம்பாலம் சிங்கபெருமாள் கோவில் அருகே அமைக்கப்படும் சென்னை புறவட்டச் சாலையுடன் இணைக்கப்படும் என்பதால், தெற்கு புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மேம்பாலம்
இந்த சாலை Bus Rapid Transit System (BRTS) வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பேருந்துகளுக்கென தனிப்பாதை ஒதுக்கப்படும். தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக இத்தகைய BRTS பாலம் முதன்முறையாக அமைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் நெரிசலின்றி விரைவாக இயக்கப்பட முடியும். இந்த மேம்பாலச் சாலை ஜிஎஸ்டி சாலையின் நடுப்பகுதியில் அமைக்கப்படுவதால், உள்ளூர் வாகன போக்குவரத்தும், அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்தும் சரியாகவும், தெளிவாகவும் பிரிக்கப்படும்.
பி.ஆர்.டி.எஸ். திட்டம்
இதன் மூலம் சாலை விபத்துகள் குறையும்; வாகனங்கள் சீரான வேகத்தில் செல்லும் சூழல் உருவாகும். மேலும், ஐயஞ்சேரி மற்றும் காட்டாங்கொளத்தூர் பகுதிகளில் நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகள் அமைக்கப்பட இருப்பதால், அப்பகுதி மக்களுக்கு எளிதான அணுகல் கிடைக்கும். முதலில் இந்த திட்டத்தில் சென்னை மெட்ரோ நிறுவனம் இணைந்து செயல்பட ஆர்வம் காட்டியிருந்தது. ஆனால் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப காரணங்களால், அவர்கள் தனியாகவே செயல்பட தீர்மானித்துள்ளனர்.
கிளாம்பாக்கம் மஹிந்திரா சிட்டி
மஹிந்திரா சிட்டி உள்ளிட்ட தொழிற்சாலை வளாகங்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தினமும் ஜிஎஸ்டி சாலையில் பயணம் செய்கிறார்கள். புதிய மேம்பாலம் அவர்களுக்கு வேகமான, பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்கும். அடுத்த சில ஆண்டுகளில் சென்னையின் மக்கள் தொகையும் வாகனங்களின் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்கவிருப்பதால், இந்த மேம்பாலம் எதிர்கால போக்குவரத்துக்கு ஒரு முக்கியமான அடித்தளமாக இருக்கும். இந்த புதிய மேம்பாலச் சாலையின் கட்டுமானப் பணிகள் நடப்பு நிதியாண்டிலேயே தொடங்கப்பட உள்ளன.
சென்னை வளர்ச்சி திட்டம்
இதன் மூலம் பயண நேரம் குறையும், வாகன நெரிசல் குறையும், பாதுகாப்பு தரம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், கிளாம்பாக்கம் முதல் மஹிந்திரா சிட்டி வரை உருவாகும் இந்த மேம்பாலம், சென்னையின் தெற்கு போக்குவரத்துக்கு ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்கிறார்கள் கட்டுமான வல்லுநர்கள். பொதுவாக சென்னை ஜிஎஸ்டி சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் இருக்கும் குறிப்பாக கிளாம்பாக்கம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது இந்த பாலத்தின் காரணமாக போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்பதோடு அப்பகுதிக்கு வளர்ச்சி தரும் திட்டமாக இருக்கும் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications