உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டதை கண்டித்ததால் விபரீத முடிவெடுத்த கல்லூரி மாணவி.. சென்னையில் அதிர்ச்சி
சென்னை: சென்னையில் கல்லூரி மாணவி விபரீத முடிவை எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹோட்டலில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டதை வீட்டில் உள்ளவர்கள் கண்டித்ததால் சென்னை மயிலாப்பூரில் கல்லூரி மாணவி விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை மயிலாப்பூர் பி.வி.கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெய பூஜா (19). இவர், சென்னை ராணி மேரி கல்லூரியில் இளங்கலை வணிகவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் உள்ள அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், நேற்று முன்தினம் இரவு ஜெய பூஜாவின் குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் சமைத்த உணவை சாப்பிட்டுள்ளனர். ஆனால், மாணவி ஜெய பூஜா மட்டும் ஓட்டலில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். இதனால் வீட்டில் உள்ளவர்கள் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த ஜெய பூஜா, தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. எனினும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா? எனவும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் ஹோட்டலில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் போக்கு வெகுவாக அதிகரித்துள்ளது. நாள்தோறும் உணவு டெலிவரி ஆப்களில் லட்சக்கணக்கான ஆர்டர்கள் குவிகின்றன. இந்நிலையில், ஆர்டர் செய்து உணவு சாப்பிட்டதை கண்டித்ததால் கல்லூரி மாணவி விபரீத முடிவை எடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications