சென்னையில் 100+ பஸ் ஸ்டாப்கள் இடம் மாற போகுது.. போக்குவரத்து நெரிசலை குறைக்க புது பிளான்!
சென்னை: சென்னையில் 100-க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. சிக்னல்கள், மேம்பாலங்களின் அருகே உள்ள பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்றுவது குறித்து மாநகர போக்குவரத்துக் கழகம் ஆய்வு மேற்கொண்டு, சென்னை மாநகராட்சியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, பஸ் ஸ்டாப்களை இடம் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலை நெரிசலை குறைப்பதற்காக சாத்தியமுள்ள இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மெட்ரோ ரயில் போன்ற சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், கார் போன்ற வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், சென்னையில் டிராஃபிக் என்பது தீராத பிரச்சனையாக உள்ளது.

சென்னையை அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே இருக்கும் சிக்னலில் பல மணி நேரம் வாகனங்கள் காத்திருக்கும் நிலை இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள், சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் மிகுந்த சிரமப்பட்டனர். இந்த நிலையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை சிக்னல் இருந்த இடம் மூடப்பட்டு, பாடி நோக்கி செல்லும் வாகனங்களுடனே ஆவின் செல்ல வேண்டிய வாகனங்களும் சென்று, ஓரு இடத்தில் 'U' டர்ன் செய்து வரும் வகையில் மாற்றப்பட்டது.
அம்பத்தூர் நோக்கிச் செல்லும் வாகனங்களுடனே சென்று தொழிற்பேட்டைக்குள் நுழைய வேண்டிய வாகனங்களும் சென்று சற்று தொலைவில் இருக்கும் U டர்ன் செய்து திரும்பி வரும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்கு சரி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலுக்குக் காரணமாக இருக்கும் பேருந்து நிறுத்தங்களை மாற்றுவதற்கான வழிகள் ஆராயப்பட்டு வருவதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சிக்னல், மேம்பாலங்கள் அருகே அமைந்துள்ள பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தொலைவுக்கு தள்ளி அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்றுவது குறித்து மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஆய்வுப் பணிகளைத் தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக பிராட்வே - முகப்பேர் (7M), வடபழனி - தரமணி (5T) இடையேயான வழித்தடங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், முக்கிய சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைந்து, போக்குவரத்து சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேருந்து நிறுத்தங்கள் இடம் மாற்றப்படவில்லை என்றும், சீரான இடைவெளியில், போக்குவரத்தை எளிதாக்க, பேருந்து நிறுத்தங்கள் மாற்றப்பட வேண்டும் என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வுப் பணிகளை முடித்து, பரிசீலனை செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்கள் மாற்றப்படும் எனக் கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சி மூலமாக, பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக முதற்கட்ட ஆய்வறிக்கை மாநகராட்சியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில், பேருந்து நிறுத்தங்கள் இடம் மாற்றப்படும் என்றும், இந்த மாற்றம் பேருந்துகளில் பயணம் செய்யும் மக்களுக்கு சிக்கலை ஏற்படுத்தாத வகையில் எளிதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications