சென்னையில் சட்டென மாறிய வானிலை.. இடி, மின்னலுடன் திடீர் மழை!
சென்னை: சென்னையில் இன்று காலை முதல் வெயில் கடுமையாக இருந்த நிலையில், மதியம் 2 மணிக்கு மேல் திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது. மழை காரணமாக தற்சமயம் வெயிலின் தாக்கம் குறைந்திருக்கிறது.
சென்னை கோயம்பேடு, அண்ணாநகர், வில்லிவாக்கம், புரசை, ஓட்டேரி, பாடி, கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் சற்று ஆசுவாசமடைந்துள்ளனர்.

வழக்கமாக மே மாதத்தில் சென்னையில் வெயில் கடுமையாக இருக்கும். ஆனால், இந்த முறை வெயில் குறைந்திருக்கிறது. கடந்த 2009க்கு பிறகு சென்னையில் 40 டிகிரி செல்சியஸுக்கு குறைவாக வெயில் பதிவானது இதுதான் முதல்முறையாகும். அதேபோல கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மே மாதத்தில் இந்தியாவில் இயல்பிற்கு அதிக மழை பெய்ததுடன், வானிலை நிகழ்வுகளும் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன்.10ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக,
கிருஷ்ணகிரி
தர்மபுரி
திருப்பத்தூர்
வேலூர்
ராணிப்பேட்டை
திருவண்ணாமலை
விழுப்புரம்
கள்ளக்குறிச்சி
கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன்.11ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
ஜூன்.12ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
ஜூன்.13 மற்றும் ஜூன்.14 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்த வரை, இன்றும் நாளையும் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. ஜூன்.10 முதல் 12 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 1-2" செல்சியஸ் வரை சற்று குறையக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்த அளவில், இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3" செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். குறிப்பாக இந்த இரு நாட்களும் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 23° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.












Click it and Unblock the Notifications