தவறுதலாக தூக்க மாத்திரை சாப்பிட்டு குழந்தை மரணம்.. சோகத்தில் தாய் தற்கொலை முயற்சி! சென்னையில் ஷாக்
சென்னை: சேலையூர் பகுதியில் தாயின் தூக்க மாத்திரையைத் தவறுதலாகச் சாப்பிட்ட குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குழந்தை உயிரிழந்த அதிர்ச்சியில் தாயும் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சம்பவம் குறித்து சேலையூர் போலீசார் இப்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை சேலையூரில் பகுதியில் வசித்து வரும் தம்பதி மிதுன்- அஸ்வினி. மிதுன் குஜராத்தில் உள்ள கம்பெனியில் வேலை செய்து வருகிறார். 31 வயதான அஸ்வினி சென்னை சிறுசேரியில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்த தம்பதி தங்கள் 4 வயது மகளுடன் சந்தோஷபுரம் கலைஞர் கருணாநிதி தெருவில் வசித்து வந்தனர். இவர்களின் மகள் அதே பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் படித்து வந்தார்.
மன அழுத்தம்: இந்த தம்பதிக்கு 7 வயதில் மகன் இருந்தார். இருப்பினும், கடந்த ஜன. மாதம் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவர் 7 வயது மகன் உயிரிழந்துவிட்டார். இதன் காரணமாக அஸ்வினி கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதற்காக அவர் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். டாக்டர் பரிந்துரையின் பெயரில் அவர் தூக்க மாத்திரைகளை எடுத்து வந்துள்ளார்.
தூக்க மாத்திரை: கடந்த ஆக.4ம் தேதி இரவு அஸ்வினி வழக்கம் போலத் தூக்க மாத்திரையைச் சாப்பிட்டுவிட்டு மீதிமிருந்த மாத்திரைகளை டேபிள் மீது வைத்துள்ளார். பிறகு அவர் கழிப்பறை சென்று வருவதற்குள் அஸ்வினியின் 4 வயது மகள், தூக்க மாத்திரையைச் சாப்பிட்டதாகத் தெரிகிறது. இதை அஸ்வினி சரியாகக் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், மகளிடம் எதாவது சாப்பிட்டாயா எனக் கேட்க, அதற்கு அக்குழந்தை எதுவும் சாப்பிடவில்லை எனப் பதிலளித்துள்ளது.
இதையடுத்து இருவரும் வழக்கம் போலத் தூங்கச் சென்றுள்ளனர். அப்போது அதிகாலை 4 மணியளவில் அஸ்வினி தூக்கத்தில் இருந்து எழுந்துள்ளார். அப்போது அருகே படுத்திருந்த மகளைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துவிட்டார். அஸ்வினியின் மகள் வாயில் நுரைதள்ளிய நிலையில் இருந்துள்ளார். அவரை எழுப்ப முயன்ற போதுதான் தனது குழந்தை உயிரிழந்துவிட்டதை அஸ்வினி அறிந்து கொண்டார்.
தற்கொலை முயற்சி: இதனால் அதிர்ந்து போன அஸ்வினி, தனது கணவருக்கும் குடும்பத்தினருக்கும் கடிதம் எழுதி வைத்துவிட்டு கழிப்பறைக்குச் சென்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். அங்கே ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கிக் கிடந்தார். காலை நீண்ட நேரம் ஆகியும் மகளும் பேத்தியும் வெளியே வராததால் பதற்றமடைந்த அஸ்வினியின் தாயார் உள்ளே சென்று பார்த்துள்ளார்.
போலீஸ் விசாரணை: அப்போது படுக்கையில் பேத்தி உயிரிழந்த நிலையிலும் கழிப்பறையில் அஸ்வினி ரத்த வெள்ளத்திலும் இருப்பதைப் பார்த்து சத்தம் போட்டு இருக்கிறார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் வந்து இருவரையும் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இருப்பினும், அந்த குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அஸ்வினிக்கு இப்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வு இல்லை. மன அழுத்தம் ஏற்பட்டால் அல்லது தற்கொலை எண்ணம் வந்தால் அதிலிருந்து விடுபடத் தமிழக அரசின் உதவி மையம் - 104 அல்லது சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கவும்.












Click it and Unblock the Notifications