தென்கொரியா மாதிரி.. சென்னையில் வரப்போகும் பெரிய மாற்றம்! மெட்ரோ ரயிலுக்கு டஃப் கொடுக்கும் BRTS
சென்னை: சென்னையில் பல்லாவரம்-துரைப்பாக்கம் வரையிலான 11 கி.மீக்கு அதிவேக பேருந்து போக்குவரத்து திட்டத்தை (BRTS) அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ள சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம், அரசிடம் நிதி கோரியிருக்கிறது.
சென்னை என்றாலே டிராபிக் ஜாம்தான். வெறும் 10 கி.மீ தூரத்தை கடக்கவே 1-1.30 மணி நேரம் வரை ஆகும். இதனால் அலுவலகத்திற்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்வோர், மருத்துவமனைக்கு போகிறவர்கள் என.. அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இதற்கான தீர்வாகத்தான் தற்போது இந்த BRTS திட்டம் முன் வைக்கப்பட்டிருக்கிறது.

BRTS திட்டம் என்றால் என்ன?
சென்னையை விட ஒரு காலத்தில் தென் கொரியா அதிக போக்குவரத்து நெரிசலை சந்தித்திருந்தது. அதிலும், தலைநகர் சியோல் சொல்லவே வேண்டாம்.. பீக் ஹவர்சில் அவ்வளவு டிராபிக் இருக்கும். இதை சரி செய்யத்தான் BRTS திட்டம் அங்கு அமல்படுத்தப்பட்டது.
அதாவது பேருந்து செல்வதற்கு என தனி வழி இருக்கும். இந்த ரூட்டில் இருக்கும் சிக்னல்கள் பேருந்துகளுக்கு மட்டும் கிரீன் சிக்னல் கொடுக்கும். அப்புறம் என்ன சல்லுனு போக வேண்டியதுதான். இப்படித்தான் சியோல் நகரத்தில் டிராபிக் ஜாம் குறைந்தது. சிங்கப்பூரில் கூட BRTS திட்டம் அமலில் இருக்கிறது.
சென்னையில் BRTS திட்டம்
இதே திட்டத்தை சென்னையிலும் அமல்படுத்த வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாகும். இந்நிலையில், தற்போது இந்த திட்டத்திற்கான நிதி கோரப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக பல்லாவரம்-துரைப்பாக்கம் வரை 11 கி.மீ தூரத்திற்கு இந்த திட்டத்தை அமல்படுத்தி பார்க்க போக்குவரத்து ஆணையம் முயற்சித்து வருகிறது. இது சாத்தியமானால், பேருந்து பயணத்தின் வேகம் அதிகரிக்கும். சென்னையை பொறுத்தவரை பேருந்துகளின் சராசரி வேகம் 12-15 கி.மீ தான். ஆனால், இந்த திட்டம் சாத்தியமானால், வேகம் 35-40 கி.மீ ஆக உயரும்.
இட நெருக்கடி
ஏன் இந்த திட்டம் முதலில் பல்லாவரம்-துரைப்பாக்கத்திற்கு இடையே கொண்டுவரப்படுகிறது என்பதற்கு அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். அதாவது, சென்னை சாலைகளில் இட நெருக்கடிதான் பெரிய பிரச்சனை. ஆனால், பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலை 60 மீ அகலத்தை கொண்டிருப்பதால் பேருந்து போவதற்கு என தனி ரூட் போட முடியும். இந்த பாதையின் குறுக்கே, மற்ற வாகனங்கள் வராதபடி டிவைடர் அமைக்கப்படும். இதனால் பேருந்துகள் எந்த தொந்தரவும் இல்லாமல் போகும்.
மட்டுமல்லாது இந்த ரூட்டில் அமைக்கப்படும் சிக்னல்கள் அனைத்தும், நவீனமானதாக இருக்கும். பேருந்து வருகிறது என்று தெரிந்தால் ஆட்டோமேட்டிக்காக சிக்னல் கிரீனுக்கு மாறிவிடும். இதனால் பேருந்து தடையில்லாமல் போகும்.
விரிவாக்கம் செய்யப்படும் திட்டம்
இந்த திட்டம் சாத்தியமானால், அடுத்தகட்டமாக பிராட்வே-பூந்தமல்லி வரை திட்டத்தை விரிவுபடுத்த போக்குவரத்து ஆணையம் யோசித்து வருகிறது. இங்குதான் உண்மையான பிரச்சனையே ஆரம்பமாகிறது. அதாவது இந்த ரூட்டில் சாலைகளின் அகலம் இடத்திற்கு இடம் மாறுபடும். பல இடங்களில் 21 மீட்டராக சாலையின் அகலம் சுருங்குகிறது. குறிப்பாக அமைந்தகரை பகுதியில் சாலையின் அகம் ரொம்பவே சிறியதாகிறது. இப்படியான சவால்களை எல்லாம் தாண்டிதான் இந்த திட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது.
மக்களுக்கு நிம்மதி
இது சாத்தியமானால், நீலாங்கரை-பல்லாவரம் 12 கி.மீ, வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை 62 கி.மீ போன்வற்றிக்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். சென்னையை பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் 35 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பேருந்துகளில் பயணிக்கிறார்கள். இப்படி இருக்கையில் BRTS போன்ற திட்டம் அமல்படுத்தப்படுவது என்பது மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.
மெட்ரோ ரயில் போல இந்த திட்டத்திற்கு பெரிய செலவு செய்ய வேண்டியதில்லை. செலவு கம்மிதான். எனவே இதுபோன்ற பேருந்துகளில் டிக்கெட்டும் கம்மியாகத்தான் இருக்கும்.












Click it and Unblock the Notifications