“சேரி” என்றால் அன்பானவர் என்று பொருள்.. சர்ச்சைத்தீ பற்றி எரிந்த நிலையில் குஷ்பு புது விளக்கம்!
சென்னை: நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ 'சேரி' மொழி எனக் குறிப்பிட்டதற்கு கடும் எதிர்வினைகள் எழுந்த நிலையில், 'சேரி' என்பதற்கு பிரெஞ்சு மொழியில் அன்பானவர் என்று பொருள் என விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் மன்சூர் அலி கான், நடிகை த்ரிஷா பற்றி பேசிய சர்ச்சைப் பேச்சு தொடர்பாக கண்டனம் தெரிவித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ. மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டபோது நடவடிக்கை எடுக்காத குஷ்பு, த்ரிஷாவுக்காகக் குரல் கொடுப்பதாகக் கூறி, எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒருவர் விமர்சனம் செய்து பதிவு வெளியிட்டிருந்தார்.

அவருக்கு பதிலளித்த குஷ்பூ, "திமுக குண்டர்கள் இப்படியான மோசமான மொழியைத் தான் பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது இது தான். சாரி, என்னால் உங்களைப் போல சேரி மொழியில் பேச முடியாது. ஆனால் என்ன நடந்தது, என்ன பேசினார்கள், என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கண்ணைத் திறந்து பாருங்கள். மேலும் திமுக உங்களுக்கு சட்டங்களை கற்றுத்தரவில்லை என்றால், நீங்கள் ஒரு வழக்கறிஞராக இருப்பது வெட்கக்கேடானது" எனத் தெரிவித்திருந்தார்.
குஷ்பூ தனது பதிவில், 'சேரி மொழி' என பயன்படுத்தியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். பெண்களை இழிவுபடுத்தும் மோசமான வார்த்தைகளுக்கு 'சேரி மொழி' என முத்திரை குத்துகிறார் குஷ்பூ, குஷ்பூ தனது வார்த்தைக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என கடும் எதிர்வினைகள் எழுந்தன. இந்நிலையில், தான் சேரி மொழி எனக் குறிப்பிட்டது பற்றி புது விளக்கம் கொடுத்துள்ளார் குஷ்பு.

இது தொடர்பாக குஷ்பூ எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நான் பயன்படுத்திய மொழி தொடர்பாக சீற்றமடைந்து வந்த கூட்டத்தைப் பார்த்தது மிகவும் வேடிக்கையாக இருந்தது. பெண்களுக்கான பிரச்சனைகளின்போது இந்தக் கூட்டம் மவுனமாகிவிடுகிறது. படித்தும் படிப்பறிவு இல்லாதவர்களுக்கு இது குறித்து சொல்லித்தர விரும்புகிறேன். என்னுடைய ட்வீட்டை கிண்டலுடன் பதிவிட்டிருந்தேன். 'சேரி' என்பதற்கு பிரெஞ்சு மொழியில் அன்பானவர் அல்லது நேசிப்பவர் என்று பொருள்.
நான் அன்பை பகிர்ந்துகொள்கிறேன் என கிண்டலாக அந்த சூழலில் அந்த வார்த்தையை பயன்படுத்தினேன். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் முன் வரிசையில் இருப்பேன். பாகுபாடு என்பது உங்களின் அழுக்குப்படிந்த மூளையில் உள்ளது. என்னுடைய எதிர்வினை மூலமாக புகழ்பெற வேண்டும் என நினைத்து செய்யும் செயல்களுக்கு நீங்கள் தகுதியானவர்கள் அல்ல" எனப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications