தெரியாத பிறை..இந்த ஆண்டு மிலாது நபி எப்போது? தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முக்கிய அறிவிப்பு!
சென்னை: இறை தூதரான முகம்மது நபியின் பிறந்த நாளான மிலாது நபி உலகெங்கும் உள்ள இஸ்லாமிய மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். இந்நிலையில் பிறை தெரியாததால், இந்த ஆண்டு மிலாது நபி செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி தெரிவித்துள்ளார்.
எல்லாம் வல்ல இறைவனின் இறைத்தூதரான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இஸ்லாம் மதத்தை தேற்றுவித்ததோடு, மறை நூலான திருகுர்ஆனை உலகுக்கு அறிவித்தவர். இவரது பிறந்தநாளே, மிலாதுன் நபியாக கொண்டாடப்படுகிறது.

முகம்மது நபி, கிபி 570 ம் ஆண்டு ரபி உல் அவல் மாதம் எனப்படும் இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதத்தின் 12 ம் நாளில் மக்கா நகரில் அவதரித்தார். இந்த நாளையே மிலாது நபியாக இஸ்லாமிய பெருமக்கள் கொண்டாடுகின்றனர்.
மிலாது நபியன்று முகம்மது நபியின் போதனைகளை போற்றும் விதமாக இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை வாசிப்பது மிக முக்கிய கடமையாக வைத்துள்ளனர். பெரும்பாலான இஸ்லாமியர்கள் இந்த நாளில் நோன்பு வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவர்கள் ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் உடைகளை தானமாக வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு மிலாது நபி செப்டம்பர் 17-ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். பொதுவாக இஸ்லாமிய பண்டிகைகள் அனைத்தும் பிறை தெரிவதன் அடிப்படையிலேயே கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு மிலாடி நபிக்கான பிறை செப்டம்பர் 27 ம் தேதி மாலையே தென்பட்டது. அதனால் செப்டம்பர் 28 ம் தேதி மிலாடி நபி கொண்டாடப்பட்டது. சவுதி அரேபியாவில் செப்டம்பர் 27 ம் தேதியே மிலாடி நபி கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு பிறை தெரியாததால் மிலாடி நபி தள்ளிப்போவதாக தலைமை காஜி அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில்,"ஹிஜ்ரி 1446 சஃபர் மாதம் 29ம் தேதி புதன்கிழமை ஆங்கில மாதம் 04-09-2024 தேதி அன்று மாலை ரபிஉல் அவ்வல் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால் வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 06-09-2024 தேதி அன்று ரபிஉல் அவ்வல் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் மிலாதுன் நபி செவ்வாய்க்கிழமை 17-09-2024 தேதி கொண்டாடப்படும்" என கூறப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications