1974 மத்திய அரசு..கைதாகும் மீனவர்! கச்சத்தீவு ஒப்பந்தத்தை எதிர்த்த திமுக.. முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
சென்னை: இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுக்கவும், மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 மீனவர்கள் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில், நேற்று (01.07.2024) இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில்,”சமீப வாரங்களில் இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகக் கவலை தரும் செய்திகள் வெளியாகி வருகின்றன. IND-TN-10-MO-1379 மற்றும் IND-TN-09-MO-2327 பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளிலும், இரண்டு பதிவு செய்யப்படாத மீன்பிடிப் படகுகளிலும் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 மீனவர்கள் 1-7-2024 அன்று இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
1974ஆம் ஆண்டிலிருந்தே. அப்போதைய ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை நிலவுவதாக ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகிய நீங்கள் உங்கள் 27-6-2024 நாளிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதைக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். தி.மு.க. தலைமையிலான மாநில அரசு கச்சத்தீவு ஒப்பந்தத்தை அப்போது முழுவீச்சில் எதிர்த்தது என்பதையும், தனது எதிர்ப்பை தமிழ்நாடு சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, இது சம்பந்தமாக மாநில அரசுடன் முறையாக கலந்தாலோசிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்திய மீன் வளம் மற்றும் மீனவர்களின் உரிமைகளுக்கும், நலன்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் அவற்றைப் பறிக்கும் வகையிலும் கச்சத் தீவை முழுமையாக இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது அப்போதைய மத்திய அரசுதான் காரணம் என்பதை அழுத்தம் திருத்தமாக சுட்டிக் காட்ட விரும்புகிறேன்
எனது தலைவரும், அப்போதைய தி.மு.க. தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மாண்பமை உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்து, அதில் "ஒன்றிய அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் அரசியலமைப்பிற்கு முரணானதாக இருக்கும்போது, கச்சத்தீவின் இறையாண்மை ஒரு தீர்க்கப்பட்ட விஷயம் என்று கூற முடியாது" என்று திட்டவட்டமாகக் கூறியிருந்ததை நினைவு கூர விரும்புகிறேன்.
பா.ஜ.க தலைமையிலான அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் இருந்தாலும், இந்தப் பிரச்சினையை தேர்தல் நேர முழக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும், கச்சத்தீவை மீட்க குறிப்பிடத்தக்க அர்த்தமுள்ள எந்த முயற்சியையும் அது எடுக்கவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயமாகும்.
எனவே தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டும் வகையில், மீனவர்களுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்து வரும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணத் தேவையான உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications