கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு ஸ்டாலின் தான் பொறுப்பு.. சிபிஐ விசாரணை தேவை.. ஜெயக்குமார் விமர்சனம்!
சென்னை: கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கலவரத்திற்கு காவல்துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் பொறுப்பு என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகம் அருகே கடந்த ஜூலை 11ம் தேதி ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட இபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பேருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதனைத் தொடர்ந்து புழல் சிறையில் இருந்து வெளியே வந்த 14 பேரை, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சால்வை அணிவித்து வரவேற்றார்.

அதிமுக சார்பில் வரவேற்பு
இதனைத்தொடர்ந்து ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த ஜூலை 11ம் தேதி திமுக அரசின் ஒத்துழைப்போடு ஓபிஎஸ் மூலம் அராஜகம் நடைபெற்றது. அதிமுக தொண்டர்கள் கோயிலாக வணங்கும் தலைமை அலுவலகம் சேதப்படுத்தப்பட்டது. சட்டம் அனைவரும் பொதுவாக இருக்க வேண்டும். ஆனால் திமுக ஆட்சியில், பாரபட்சமாக அதிமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிபிஐ விசாரணை தேவை
தொடர்ந்து கள்ளக்குறிச்சி விசாரணை தொடர்பாக அரசு குழு மேல் குழு அமைப்பதால் குழப்பங்கள்தான் அதிகரிக்கும். ஒரு தாயின் நியாயமான கேள்விகள், கோரிக்கைகளுக்கு திமுக அரசுக்கு பதிலளிக்க வழியில்லை. இந்த வழக்கில் உண்மை நிலையை கண்டறிந்து நாட்டு மக்கள் முன் உரியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தி வருகிறது.
ஆளுங்கட்சிக்கு இந்த விவகாரத்தில் விருப்பு, வெறுப்பு இல்லையென்றால், சிபிஐ விசாரணை நடத்துவதில் என்ன பிரச்னை இருகிறது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அரசு ஏன் தயங்குகிறது என தெரியவில்லை. அதிகாரிகளை, மாவட்ட நிர்வாகிகளை மாற்றுவதில் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. காவல்துறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கையில் உள்ளது. எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்

ஸ்டாலின் மீது விமர்சனம்
திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் சட்டம் ஒழுங்கு பாழாகிவிடும். அதைதான் நீதிமன்றம், தமிழகம் அமைதிப்பூங்கா என்ற பெயரை புரட்டிப்போட்டுவிட்டது என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் காவல்துறை அரசின் கட்டுப்பாட்டில் இல்லையா என்று கருத்து தெரிவித்துள்ளது. இது யாருக்கு ஏற்பட்டுள்ள அவமானம். இதனை உள்துறையை கையில் வைத்திருக்கின்ற ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ள அவமானமாகத்தான் நாம் கருத வேண்டும். உண்மையாகவே அப்படியிருந்தால், அந்த துறையின் அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்.
கள்ளக்குறிச்சியில் நடந்ததுபோல் இதுவரை ஒரு கலவரம் வந்து யாருமே பார்த்திருக்கவே முடியாது. அந்த அளவுக்கு ஒரு கலவரம் வந்திருக்கிறது என்றால், அதற்கு முழு பொறுப்பேற்க வேண்டியது, திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின். அவர் உள்துறையை யாருக்காவது கொடுத்தால் நன்றாக இருக்கும், அவர் கொடுக்கமாட்டார்.
Recommended Video

திமுக மீது விமர்சனம்
தொடர்ந்து திமுக அரசு சொத்து வரி உயர்த்திய போதே அதிமுக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. இப்போது மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. விரைவில் பேருந்து கட்டணம் உயரும். கட்டண உயர்வை திருத்தி அமைப்பு, மாற்றம் என்று கூறி திமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது என்று குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications