படிக்கிற புத்தகத்தில் இருந்துதான் வரும்..ஏன் டென்ஷன் ஆகணும்..மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்
10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் 'ஆல் தி பெஸ்ட்' கூறி சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ள நிலையில், மாணவர்களுக்கு தேவையானது எல்லாம் தன்னம்பிக்கையும் மன உறுதியும் தான் என்றும் மாணவர்கள் பதற்றம் இன்றி தேர்வை எழுத வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறும். ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பருவ தேர்வாகவும், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வாகவும் நடைபெறுகிறது.
பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணையின் படி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (மார்ச் 1) தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை நடக்கிறது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 14 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் 6 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தேர்வு என்றாலே டென்ஷன்..
பொதுவாக தேர்வு என்றாலே மாணவ மாணவிகள் மத்தியில் ஒரு டென்ஷன் எகிறும். ஆண்டு முழுவதும் தாங்கள் படித்த பாடங்களில் இருந்து கேள்விகள் என்றாலும் கூட பொதுத்தேர்வு என்பதால் மாணவர்கள் மத்தியில் இயல்பாகவே இதுபோன்ற பதற்றங்கள் வந்து விடுகின்றன. போதாக்குறைக்கு பெற்றோரும் உறவினர்களும் பொதுத்தேர்வு என்பதால் கூடுதல் அக்கறை செலுத்தி படிக்க வற்புறுத்துவதுண்டு. இதனால், இத்தகைய பொதுத்தேர்வு மாணவ மாணவிகள் மத்தியில் கொஞ்சம் அதிக டென்ஷனை ஆக்கி விடுகிறது.

முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்
இந்த நிலையில், பொதுதேர்வு எழுத இருக்கும் மாணவ மாணவிகள் பதற்றம் இன்றி தேர்வை எழுத வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுரை விடுத்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டரில் வெளியிட்டு இருக்கும் வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:- 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் வணக்கம்..பரிட்சை டென்ஷனில் இருக்கீங்களா.. ஒரு டென்ஷனும் வேண்டாம்... எந்த பயமும் வேண்டாம்.

படிக்கிற புத்தகத்தில் இருந்துதான்
இது ஜஸ்ட் இன்னொரு பரீட்சை அவ்ளோதான்.. அப்படித்தான் அணுகனும். எந்த கேள்வியாக இருந்தாலும் நீங்கள் படிக்கிற புத்தகத்தில் இருந்துதான் வரப்போகுது. அப்படித்தான் இதை நீங்கள் அணுக வேண்டும். உங்களுக்கு தேவையானது எல்லாம் தன்னம்பிக்கையும் மன உறுதியும் தான். அது இருந்தாலே நீங்க பாதி ஜெயிச்சீட்டிங்க.. தேர்வு என்பது உங்களை பரிசோதிக்க அல்ல.. உங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துட்டு போறது.. உயர்த்தி விடுறது..

"ஆல் தி பெஸ்ட்"
அதனால மீண்டும் சொல்றேன்.. எந்த வித தயக்கமும் இல்லாமல் தேர்வுகளை எதிர்கொள்ளுங்க.. தேர்வை பார்த்து பயம் வேண்டாம். பாடங்களை ஆழ்ந்து படிங்க.. புரிந்து படியுங்கள்.. விடைகளை தெளிவாக முழுமையாக எழுதுங்கள்.. நிச்சயமாக வெற்றி பெறுவீங்க.. உங்க வெற்றிக்காக உங்கள் பெற்றோரையும் ஆசிரியரையும் போல நானும் காத்திருக்கிறேன். முதல்வராக மட்டும் இல்லை. உங்கள் குடுமபத்தில் ஒருத்தனா வாழ்த்துறேன். ஆல் தி பெஸ்ட்!" இவ்வாறு அவர் கூறியுள்ளர்.












Click it and Unblock the Notifications