1,000 அரங்குகள்.. லட்சக்கணக்கான புத்தகங்கள்! சென்னையில் இன்று தொடங்குகிறது புத்தகக் கண்காட்சி
சென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள்(பபாசி) சார்பில் நடத்தப்படும் புத்தகக் காட்சி இன்று(ஜன.06) சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்குகிறது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை 5.30 அளவில் தொடங்கி வைக்கிறார். புத்தகக் கண்காட்சி நடைபெறும் 17 நாட்களும் காலை 11 முதல் இரவு 8.30 வரை புத்தக விற்பனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடைபெறுவது வழக்கமாகும். இடையில் கொரோனா தொற்று காரணமாக ஒரு முறை இந்த புத்தகக் காட்சி நடைபெறாமல் இருந்தது. இதனையடுத்து மீண்டும் நடைபெற தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் சுமார் 1,000 அரங்குகளுடன் இந்த புத்தகக் காட்சி நடைபெறுகிறது. இன்று தொடங்கி வரும் 22ம் தேதி வரை சுமார் 17 நாட்கள் இந்த காட்சி நடைபெறுகிறது.
தொடக்க விழாவான இன்று 6 எழுத்தாளர்களுக்கு கருணாநிதி பெயரில் பொற்கிழி விருதுடன் தலா ரூ.1 லட்சம் தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். அதேபோல பாபாசி சார்பிலும் 9 பேருக்கு பதிப்பகச் செம்மல் விருது உட்பட பல சிறப்பு விருதுகளும் வழங்கப்படும். இதனால் ஒய்எம்சிஏ மைதானம் களைக்கட்டியுள்ளது.

1,000 அரங்குகள்
புத்தகக் கண்காட்சி நடைபெறும் 17 நாட்களும் காலை 11 முதல் இரவு 8.30 வரை புத்தக விற்பனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் வழங்கப்படும் பொற்கிழி விருதை பொறுத்த அளவில், தேவி பாரதி, சந்திரா தங்கராஜ், தேவதேவன், சி.மோகன், பிரளயன், பா.ரா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. கடந்த முறை புத்தகக் காட்சியில் மொத்தம் 800 அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆனால் இந்த முறை இது 1,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என பாபசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிகள்
அதேபோல குழந்தைகளுக்கான புத்தகங்களுக்கு தனியாக அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், மாற்று பாலினத்தவர்கள் நடத்தும் குயர் பதிப்பகத்திற்கும் அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மட்டுமல்லாது இலங்கை போன்ற வெளிநாடுகளிலிருந்தும் புத்த விற்பனையாளர்கள் இதில் பங்கேற்றிருக்கின்றனர். பத்தகக் காட்சியின் ஒரு அங்கமாக தினமும் மாலை மைதானத்தின் வளாகத்தில் மக்களின் வாசிக்கும் பழக்கத்தைப் பரவலாக்கவும், சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பட்டிமன்றம், எழுத்தாளர்கள் உரை ஆகியவை நிகழ்த்தப்படுவதாகவும் பபாசி தெரிவித்துள்ளது.

போட்டிகள்
மேலும் புத்தகங்கள் மீது இளம் தலைமுறையினருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை போட்டி நடைபெறுகிறது. இதில் பங்கேற்றவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் பபாசி சான்றிதழ்களை வழங்குகிறது. இது பபாசியின் 46வது புத்தகக் காட்சியாகும். இதற்கு முன்னர் சென்னையில் 41 முறையும், மதுரையில் 12 முறையும் கோவையில் 4 முறையும் இந்த புத்தகக் காட்சி நடைபெற்று வந்திருக்கிறது. இந்தியாவில் புத்தகக் காட்சி ஆண்டுக்கு ஒரு முறை என நிரந்தரமாக தமிழ்நாட்டில் மட்டுமே நடத்தப்படுகிறது.

பபாசி
தென்னிந்திய புத்த விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள்(பபாசி) சங்கத்தில் சுமார் 489 பதிப்பாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் சில பதிப்பாளர்கள் ஆங்கிலம் மற்றும் இதர மொழிகளிலும் புத்தகத்தை வெளியிடுகிறார்கள். இன்று தொடங்கும் புத்தகக் காட்சியில் கொரோனா தொற்று தடுப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படும் என்று பபாசி தெரிவித்துள்ளது. மேலும், நுழைவு கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சி நடைபெறும்போது சிறிய பதிப்பகங்களுக்கு அரங்குகளை ஒதுக்குவதில் தொடர்ந்து சிக்கல்கள் மேலெழுந்து வருகின்றதாக பதிப்பாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மட்டுமல்லாது அரங்குகளுக்கான கட்டணமும் ஆண்டு தோறும் தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications