"உங்களை முதலமைச்சராக அறிவிக்கப்போகிறோம்” என போன் வந்தது.. போட்டு உடைத்த திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பதில் விசிக ஏன் காலம் தாழ்த்தியது எனும் விமர்சனம் முன்வைக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதில் அளித்துள்ளார். அதிமுக - திமுக சேர்ந்து ஆட்சி அமைப்பது, முதலமைச்சராக தன்னை முன்வைத்தது பற்றியும் பதில் அளித்துள்ளார் திருமாவளவன்.

விசிக தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், "தேர்தலுக்கு முன்பே நான் ஒரு நேரலையில் பேசுகிற போது, இந்த தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் வெகுவான மாற்றத்தை உருவாக்கும், புதிய அணி சேர்க்கை உருவாகும் அப்படிங்கிற கருத்தைப் பதிவு செய்தேன். நான் ஏன் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடப் போறேன் அப்படிங்கறத பத்தி எங்க இயக்கத் தோழர்களுக்கு விளக்கம் சொல்லும்போது, 'இந்த காரணத்தால் நான் சட்டமன்றத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்' அப்படிங்கிற தகவலைச் சொல்லி இருந்தேன்.

Thirumavalavan Breaks Silence on VCK s Delayed Support to TVK

தொங்கு சட்டசபையை யூகித்தேன் - திருமாவளவன்

அப்ப நான் என்ன யூகம் பண்ணேன்னா... விஜய் சிறுபான்மை சமூகத்தினரின் வாக்குகளை வெகுவாகப் பிரிப்பார், குறிப்பாக இஸ்லாமியர், கிறித்தவர் வாக்குகளைப் பிரிப்பார். அப்படிப் பிரிக்கிறபோது திமுக கூட்டணியின் மொத்த எண்ணிக்கை, அதாவது வெற்றி பெறக்கூடிய இடங்களின் மொத்த எண்ணிக்கையில் பெரிய சரிவு ஏற்படலாம்; ஆட்சி அமைப்பதற்குப் போதிய இடங்கள் கிடைக்காமல் போகலாம் அப்படிங்கிற ஒரு யூகம் எனக்குள்ள இருந்தது. நான் அதை அப்ப வெளிப்படையா சொல்லல.

இப்ப 'தொங்கு சட்டசபை வரும்னு இவரு எதிர்பார்க்கிறாரா?' அப்படிங்கிற விவாதங்கள் எல்லாம் வெளியில நடந்துச்சு. நான் முழுமையாக மாறும் அப்படின்னு எதிர்பார்க்கல. திமுக கூட்டணி வந்து முன்னணியில இருக்கும், ஆனா போதுமான எண்ணிக்கை இருக்காது என நினைத்தேன். தவெக வந்து கூடுதல் இடங்களைப் பெற்று, அவங்களுக்கு ஒரு 11, 12 இடங்கள் குறைவா இருக்கிற சூழல் உருவாகிவிட்டது. இது எதிர்பாராத ஒன்று. ஆனால் தொங்கு சட்டசபை உருவாகும் அப்படிங்கிறத நான் யூகித்தேன்.

மாற்றம் - நெடுநாளைய போராட்டத்தின் விளைச்சல்

இப்ப இந்த மாற்றம் அப்படிங்கிறது தமிழக அரசியல் களத்தில் நெடுநாளைய போராட்டத்தின் ஒரு விளைச்சல் தான். நான் அதை அப்படித்தான் பார்க்கிறேன். ஏன்னா, திமுக, அதிமுக-வுக்கு மாற்றா தமிழ்நாட்டில் பாமக வந்துச்சு. அவங்க ஒரு மாற்று சக்தியா தங்களை முன்னிறுத்துனாங்க. அதற்கு முன்பே இந்த அரசியல் நடந்திருக்கலாம்.

சமகாலத்தில் மதிமுக-வும் அப்படித்தான் உருவானது. திமுக, அதிமுக-வுக்கு மாற்றா மதிமுக-வை முன்னிறுத்துனாங்க. அதன் பிறகு விஜயகாந்த் வந்து திமுக-வுக்கும் அதிமுக-வுக்கும் மாற்றாகத் தேமுதிக-வை மிகத் தீவிரமாக முன்னிறுத்தினார். இந்த மாற்று அரசியல் என்பது தமிழ்நாட்டில் நீண்ட காலமாகத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

தற்போதைய புதிய அரசியல் சூழல்ல, தவெக தலைவர் தம்பி விஜய் உடனான எதிர்கால அரசியல் உறவு எப்படி இருக்கும்னு கேக்குறீங்க. மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பியிருக்காங்க, ஒரு தீர்ப்பைக் கொடுத்திருக்காங்க. ஜனநாயகத்துல மக்கள் தீர்ப்பை நாம் மதிச்சுதான் ஆகணும். அரசியல் களம்ங்கிறது எப்போதுமே தேங்கி நிற்காது, அது நகர்ந்துகிட்டே இருக்கும்.

தம்பி விஜய் அவங்களுடைய அரசியல் நகர்வுகளையும், அவங்க எடுக்கப்போற கொள்கை முடிவுகளையும் பொறுத்துதான் நம்முடைய எதிர்கால அரசியல் நிலைப்பாடுகளும், உறவுகளும் அமையும். இப்போதைக்கு நாம் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் சொல்ல முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.

என்ன நடந்தது?

மேலும் பேசிய திருமாவளவன், "நாம் எந்த முடிவெடுத்தாலும் சேர்ந்து முடிவெடுப்போம். அந்த முடிவு எதுவாக இருந்தாலும், மரியாதை நிமித்தமாக இவ்வளவுநாள் பயணித்துவரும் திமுக தலைவரிடம் தெரிவித்துவிட்டு, வெளியே சொல்லலாம் என நான் இடதுசாரிகளிடம் தெரிவித்தேன். அதுமட்டுமின்றி குறைந்தபட்ச செயல் திட்டத்தை விஜய்க்கு முன்வைப்போம் என இடதுசாரிகளிடம் கோரிக்கை வைத்தேன். அதன் பிறகு அவர்களது கூட்டம் கூடியது. அது 4 மணிக்கு முடியும் என்பதால், நாங்கள் 5 மணிக்கு வைத்து பிறகு அது 6 மணி என்றானது.

இதற்கிடையில், இடதுசாரிகளின் மாநிலச் செயலாளர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு தவெகவுக்கு ஆதரவு தருவதாகச் சொன்னார்கள். முன்னதாக 5ஆம் தேதி மாலை திமுக கூட்டணி கட்சியினர், திமுக தலைவரை நேரில் சந்தித்தோம். அப்போது அவர், இது மக்கள் அளித்த தீர்ப்பு. எனவே அவர் ஆட்சி அமைப்பதை நாம் யாரும் இடையூறு செய்யக்கூடாது. அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுவோம் எனவும் தெரிவித்தார்.

7ஆம் தேதி தனித்தனியாக மு.க.ஸ்டாலினிடம் இருந்து அழைப்பு வந்தது. நாங்கள் சென்று சேர்ந்து சந்தித்தபோது, அதிமுக - திமுக சேர்ந்தால், ஆட்சி அமைக்கக்கூடிய சூழல் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கலாம் என்ன சொல்கிறீர்கள் எனக் கேட்டார்கள். நான், இது திமுகவுக்கே பெரிய கேள்விக்குறியாகிவிடும். உங்கள் எதிர்காலமே சூனியமாகிவிடும். இது நல்ல முயற்சி இல்லை என நான் சொல்லிவிட்டேன். இடதுசாரிகளும் கிட்டத்தட்ட அதனையே கூறியுள்ளனர்.

முதலமைச்சர் பதவி

பிறகு அது தொடர்பாக எந்தப் பேச்சும் எங்களிடம் வரவில்லை. 8ஆம் தேதி நான் அவரைச் சந்தித்தபோது, இடதுசாரிகளைத் தொடர்ந்து நீங்களும் தவெகவை ஆதரிப்பது என முடிவு செய்துள்ளீர்கள். அதனைச் செய்யுங்கள் என ஸ்டாலின் தெரிவித்துவிட்டார். அவர் அங்கிருந்து சென்றபிறகு, இந்த விவகாரத்தில் தற்போது வேறு ஒரு பேச்சு எழுந்துள்ளது. திருமாவளவனை பொதுவாக முதலமைச்சராகவும், இபிஎஸ் உள்ளிட்டோர் துணை முதலமைச்சராகவும் ஏற்பதற்கு அதிமுக தரப்பில் இருந்து பேச்சுகள் எழுந்துள்ளன எனத் தெரிவித்தனர். மேலும், அப்படியாக ஒன்று நடந்தால், நாங்கள் வெளியில் இருந்து உங்களை ஆதரிப்போம் எனத் தெரிவித்தனர். இதுவெல்லாம் தமிழ்நாட்டில் நடக்குமா எனக் கூறிவிட்டு சிரித்துவிட்டு வந்துவிட்டேன்.

வேளச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, நான் 9ஆம் தேதி முடிவை அறிவிக்கிறேன் எனத் தெரிவித்துவிட்டேன். இதற்கிடையில், எங்கள் கட்சியினருடனான ஆலோசனையில் என்ன நடந்தது என்பதையும் பார்க்க வேண்டும். இடதுசாரிகள் கருத்தை வழிமொழிகிறோம் சரி. ஆனால், அவர்கள் அமைச்சரவையில் இடம் இல்லை என்பதை முடிவெடுத்தால், அதனையே நாம் எடுக்க வேண்டுமா என்பதுகுறித்து ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டது. நிர்வாகிகள் பலரும், அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

8ஆம் தேதி மாலையே ஆதரவு கடிதம் தயார் செய்து, ரவிக்குமாருக்கு வந்துவிட்டது. வன்னி அரசு வெளியே இருந்தார். அங்கு இருந்து சென்னை வர 9ஆம் தேதி காலை தாமதமானது. நானும் அவரை என்னைச் சந்திப்பதற்கு முன்பாக பொதுச் செயலாளர்களைப் பார்த்துவிட்டு வரச் சொன்னேன். அதனால், 12.45 மணி போல் தான் என்னை வந்து சந்தித்தார்கள். அங்கு வைத்து அமைச்சரவையில் இடம் பெறுவதா வேண்டாமா என்பதை ஆலோசித்தோம்.

ஆதரவு தருவதென்றால், அமைச்சரவையில் இடம் பெற வேண்டும். அதில் நீங்களே செல்ல வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். தவெக தரப்பில் இருந்து இதனை விரும்புகிறார்கள் எனவும், திருச்சி கிழக்கில் போட்டியிடவும் விரும்புவதாக என்னிடம் பேசினர். பிறகு விஜய்யும் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு அழைப்புவிடுத்து, நீங்கள் விரும்பியதுபோல் இருக்கலாம் என்றார். பிறகு ஆலோசனை முடித்துவிட்டு, 3 மணிக்கு ஆதவுக்கு தகவல் கொடுத்துவரச் சொல்லி அவரிடம் கடிதம் கொடுக்க 4 மணி ஆனது.

ஆதவ் அர்ஜுனாவிடம் கடிதம் கொடுத்த பிறகு வந்த போன் கால்

இதற்கிடையில் சிலர் என்னைத் தொடர்புகொண்டனர். ஆனால், அதிகாரபூர்வமான தொடர்பு எனச் சொல்லமுடியாது. அவர்கள் 9ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு என்னைத் தொடர்புகொண்ட போது, என்னை முதலமைச்சராக முன்வைத்து பேசினர். ஆனால், நான் எங்கள் முடிவை தெரிவித்துவிட்டேன். முதலமைச்சரா அல்லது துணை முதலமைச்சரா என்பதில் தாமதம் என்பது தவறான கருத்து.

ஆனால், ஆதவ் அர்ஜுனாவிடம் ஆதரவு கடிதம் கொடுத்துவிட்டு, மாலை 4 மணிக்கு புறப்பட்டு செய்தியாளர்களைச் சந்திக்க அலுவலகம் வருகிறேன். சுமார் 4.45 மணிக்கு எனக்கு ஒரு தரப்பில் இருந்து முக்கிய நபர் போன் செய்து, 'அனைத்தும் முடிந்துவிட்டது. ஆதரவு கடிதம் கொடுத்திருந்தாலும், செய்தியாளர்களைச் சந்திக்காதீர்கள். உங்களை முதலமைச்சராக அறிவிக்கப்போகிறோம்' எனச் சொன்னார்கள். நான் வேண்டாம் நாங்கள் ஆதரவு கடிதம் கொடுத்துவிட்டோம். செய்தியாளர்களைச் சந்திக்கிறேன் என்று தெரிவித்துவிட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+