இந்திய கடற்படையால் சுடப்பட்ட மீனவர்.. ரூ.2 லட்சம் நிவாரணம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னை: இந்திய கடற்படையால் சுடப்பட்ட மீனவர் வீரவேலுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறையை சேர்ந்த 10 மீனவர்கள் விசைப்படகில் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஒன்றாக சேர்ந்து மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இந்திய கடலோர காவல்படையினர் மீனவர்கள் விசைப்படகை நிறுத்தச் சொல்லி சிக்னல் காட்டியதாக கூறப்படுகிறது.

தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு
அப்போது படகை நிறுத்தாமல் சென்றதால் சந்தேகம் அடைந்த இந்திய கடற்படையினர் படகை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் வீரவேல் என்பவர் படுகாயமடைந்தார். இதையடுத்து இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் காயமடைந்த மீனவர் மீட்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.

மதுரை மருத்துவமனையில் சிகிச்சை
மீனவர்களிடம் நடத்திய விசாரணையில் இருட்டாக இருந்ததால் இந்திய கடற்படையினர் அளித்த சிக்னலை கவனிக்காமல் சென்றதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட மீனவர் வீரவேல், மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

நலம் விசாரித்த அமைச்சர்கள்
இதன்பின்னர் தமிழக அமைச்சர்களான அனிதா ராதாகிருஷ்ணன், மூர்த்தி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காயமடைந்த மீனவர் வீரவேலுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலிப் வேதனை
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் வீரவேல் காயமடைந்ததை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications