பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் சிறை.. பேரவையில் கொண்டு வரப்பட்ட மசோதா.. முக்கிய அம்சங்கள் என்ன?
சென்னை: பெண்ணை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்கவும் மசோதா கொண்டு வரப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 5வது நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2025ஆம் ஆண்டு குற்றவியல் சட்டங்கள் முன்முடிவு மற்றும் பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்து சட்டப்படி அவர்களுக்கு கிடைத்த வேண்டிய தண்டனை வாங்கி கொடுப்பதில் தமிழக அரசு உறுதியாக செயல்பட்டு வருகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறது தமிழ்நாடு அரசு. 86 சதவிகித வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறோம். சத்யா என்ற பெண் ரயிலில் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை பெற்று கொடுத்துள்ளோம்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை என்பது யாராலும் மன்னிக்க முடியாத குற்றம். இத்தகைய கொடூர குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படுகிற தண்டனை, இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கான கடும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த வகையில் பிஎன்எஸ் சட்டத்தின் கீழும், நமது மாநில அரசு சட்டங்களின் கீழும் ஏற்கனவே இதுபோன்ற குற்றங்களுக்கு தண்டனை வரையிறுக்கப்பட்டிருந்தாலும், தற்போது தண்டனையை கடுமையாக்கிட வேண்டிய அவசியம் இருப்பதாக கருதுகிறோம்.
இதற்காக பிஎன்எஸ் மற்றும் பிஎன்எஸ்எஸ் சட்டங்களில் மாநில சட்டத்திருத்தத்திற்கும் தமிழ்நாடு 1998ஆம் ஆண்டு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத்திருத்ததிற்கும் சட்ட முன் முடிவுகளை பேரவை முடிவுகளுக்காக முன் வைக்கிறேன் என்று தெரிவித்தார். இந்த புதிய சட்டத்திருத்தத்தின் படி, மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால் ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கப்படும்.
ஆசிட் வீச்சு சம்பவம் ஏற்பட்டால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும். அதேபோல் பாலியல் வன்கொடுமை வழக்கில் 14 ஆண்டுகளுக்கு குறையாமல் கடுங்காவல் தண்டனை அளிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் பெண்ணை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறையும், பிணையில் விடுவிக்காதபடியும் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
அதேபோல் பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தால் 3 முதல் 5 ஆண்டுகள் வடை சிறை தண்டனையும் பெற்று கொடுக்க முடியும். குறிப்பிட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை அளிக்கவும் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தம் மீது நாளை விவாதம் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications