காவிரி உரிமை காக்க தொடர்ந்து போராடுவோம்.. மேகதாது அணையை கட்ட விடமாட்டோம்.. ஸ்டாலின் உறுதி
சென்னை: காவிரியின் உரிமையை காக்கத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடும் எனவும், மேகதாது அணையை கட்ட விட மாட்டோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் ஜூன் 23ம் தேதிக்கு நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இதனிடையே காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்கே ஹல்தர், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தலைவர் நிர்மல்குமார் உள்ளிட்ட மேலாண்மை ஆணையக் குழுவினர், மேட்டூர் அணை மற்றும் கல்லணை கால்வாய் பகுதிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய குழுவின் தலைவர் எஸ்கே ஹல்தர், வரும் 23ம் தேதி நடைபெறும் ஆணையக் கூட்டத்தில், மேகேதாட்டு அணை குறித்து விவாதிக்கப்படும். காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என்பது ஒரு சுதந்திரமான அமைப்பு. இது சுதந்திரமாக செயல்படும். எங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. மேகதாது அணை குறித்து விவாதிக்க எங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. அதனால்தான் விவாதத்திற்கு எடுத்து உள்ளோம். இதுகுறித்து சட்ட ஆலோசனையும் பெற்று உள்ளோம் என்று தெரிவித்தார்.
இதனிடையே டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சந்தித்தார். இதுகுறித்து அவர், நீர்வளத்துறை அமைச்சர் உடனான சந்திப்பு நட்பு ரீதியிலானது என்று கூறினார். ஆனால் இந்த சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.

இந்தநிலையில் மேகதாது விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், காவிரி உரிமையை காக்க தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து போராடும். ஒருபோதும் மேகதாது அணையை கட்ட விடமாட்டோம். மேகதாது அணையைக் கர்நாடக அரசு கட்டுவது என்பது, தமிழக விவசாயிகளுக்குச் செய்யும் பெரும் துரோகம். அதுமட்டுமல்லாமல், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கும், காவிரி தொடர்பான அனைத்து சட்டம், விதிகளுக்கும் மாறானது.
மேகதாது அணை குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விவாதிக்கும் என அதன் தலைவர் கூறியது சட்டவிரோதம். தமிழக மக்களின் உணர்வுகள் குறித்து மத்திய அரசுக்கு உணர்த்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் குழு டெல்லி செல்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் விரைவில் மேகதாது விவகாரம் தொடர்பான குழு டெல்லி செல்லும். காவிரியில் உரிமை காக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications