"கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே" கமல்ஹாசனுக்கு முதல்வர் முக ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!
சென்னை: கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே என்று நடிகர் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் மகத்தான கலைஞன் நடிகர் கமல்ஹாசன். இவர் இன்று தனது 68வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த வயதிலும், இளைஞர்களுக்கு நிகராக தன்னுடைய ஒவ்வொரு படத்தையும் தேர்வு செய்து நடித்து, அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.
அண்மையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் வசூல் சாதனை செய்தது. இதனைத் தொடர்ந்து மணிரத்னம், பா.இரஞ்சித், மகேஷ் நாராயணன், வெற்றி மாறன், ஹெச்.வினோத் உள்ளிட்ட இயக்குநர்களுடன் கைகோர்த்துள்ளார்.

அரசியல்வாதி கமல்ஹாசன்
அதுமட்டுமல்லாமல் சினிமாவை கடந்து நற்பணி மன்றம் வாயிலாக மக்களுக்கு உதவிகள் செய்து வந்த கமல்ஹாசன், சில ஆண்டுகளுக்கு முன்னதாக மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி, அரசியலிலும் தீவிரம் காட்டி வருகிறார். திமுகவின் வாக்குறுதியான மாதந்தோறும் மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை முதல்முதலாக கமல்ஹாசனாலே பேசப்பட்டது.

கலைஞன் கமல்ஹாசன்
கமல்ஹாசன் தொடங்கி வைத்த மகளிர் உரிமைத் தொகை வாக்குறுதி, தற்போது தமிழ்நாடு கடந்து குஜராத், இமாச்சலப் பிரதேச மாநிலங்களிலும் எதிரொலித்து வருகிறது. அரசியலில் குறிப்பிட தகுந்த வெற்றிக்காக தொடர்ந்து உழைத்து வரும் கமல்ஹாசன், தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அதேபோல் சினிமா மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

ரசிகர்கள் கொண்டாட்டம்
நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் என ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் பல்வேறு மாவட்டங்களிலும் கமல்ஹாசன் பிறந்தநாளை ரசிகர்களும், அவரது கட்சி நிர்வாகிகளும் கொண்டாடி வருகின்றனர்.

முக ஸ்டாலின் வாழ்த்து
இந்த நிலையில் திரைத்துறை ஜாம்பவான் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்புத்தோழர் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம்! என்று வாழ்த்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications