ரஜினியிடம் உடல் நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி - பூரண குணமடைய ஓபிஎஸ் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி. பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்திடம் தொலைபேசி மூலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடல் நலம் குறித்து விசாரித்தார். அவர் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்வதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி விரைவில் குணமடைய துணை முதல்வர் ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக கூறியிருக்கிறார். தனது பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்த பின்னர் தனி விமானம் மூலம் சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்க ஹைதராபாத் சென்றார். விமானத்திலேயே கேக் வெட்டி 70வது பிறந்தநாளை கொண்டாடினார் ரஜினி.
ஹைதராபாத்தில் நயன்தாராவுடன் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. அந்த போட்டோக்கள் இணைய தளத்தில் வைரலானது. இதனிடையே அண்ணாத்த படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா உறுதியானதால் படப்பிடிப்பு பாதியில் ரத்தானது. இதை தொடர்ந்து ரஜினிகாந்த் ஹைதராபாத்திலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

ரஜினிக்கு பாதிப்பு
ரஜினிகாந்திற்கு கொரோனா இல்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்தது. இருப்பினும் ரத்த அழுத்தம் காரணமாக நேற்று அவர் ஹைதராபாத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மருத்துவர்கள் கண்காணிப்பு
உடல் சோர்வைத் தாண்டி அவருக்கு வேறெந்த பிரச்னைகளும் இல்லை என்றும் இதயத் துடிப்பு, இரத்த ஓட்டம் ஆகியவை சீராக இருப்பதாகவும் ரத்த அழுத்தம் சீராகி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படும் வரை உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சிகிச்சை தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்துக்கு பூரண ஓய்வு தேவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் நலம் விசாரிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் விசாரித்துள்ளார். அதேபோல் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் ரஜினியின் உடல் நலம் குணமடைய வாழ்த்து கூறியுள்ளார்.

முதல்வர் நலம் விசாரித்தார்
இந்நிலையில் ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்திடம் தொலைபேசி மூலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார். ரஜினிகாந்த் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

ரஜினி குணமடைய ஓபிஎஸ் வாழ்த்து
ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச்சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஓ.பன்னீர் செல்வம் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications