பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
சென்னை: பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
சென்னையில் நேற்றிரவு மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த முத்துகிருஷ்ணன் பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இந்நிலையில் இந்தச் செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்ததாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலக செய்தி பிரிவில் செய்தியாளராக பணியாற்றிய திரு. முத்துகிருஷ்ணன் அவர்கள் (வயது 24), நேற்று (22.10.2022) இரவு சென்னை, ஜாபர்கான்பேட்டையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து பலத்த காயமடைந்து, இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று (23.10.2022) பிற்பகல் திரு. முத்துகிருஷ்ணன் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

முத்துகிருஷ்ணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஊடகத் துறை நண்பர்களுக்கும் இத்துயர்மிகு நேரத்தில் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டதின் கீழ் ரூ.3 லட்சமும், சேர்த்து உயிரிழந்த திரு.முத்துகிருஷ்ணன் அவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.












Click it and Unblock the Notifications