சென்னையில் 46,727 டன் குப்பைகள் அகற்றம்! 3,449 தூய்மை பணியாளர்களுக்கு 4,000 போனஸ்! சொந்த ஊர் ரிடர்ன்
சென்னை: புயல், மழை காரணமாக 46,727.66 மெட்ரிக் டன் குப்பைகள் மற்றும் தோட்டக்கழிவுகள் சென்னையில் அகற்றப்பட்டுள்ளன.
சென்னையை சுத்தம் செய்வதற்காக வெளியூர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு ரூ.4,000 ஊக்கத் தொகையும், சான்றிதழும் வழங்கி பாராட்டி ஊருக்கு அனுப்பி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

சென்னை மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கிய குப்பை மற்றும் தோட்டக்கழிவுகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட 3449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய், என மொத்தம் 1 கோடியே 37 இலட்சத்து 96 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கும் அடையாளமாக 15 தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதலமைச்சர் வழங்கினார்.
தமிழ்நாட்டில் 'மிக்ஜாம்' புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சீரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கனமழையால் பாதிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகள், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகள், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், பொன்னேரி, திருநின்றவூர், மாங்காடு, பூந்தமல்லி, திருவேற்காடு, குன்றத்தூர் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் உள்ள தெருக்கள், சாலைகளில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் தோட்டக்கழிவுகளை அகற்றி, தூய்மைப் பணிகளை மேற்கொள்ள திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், வேலூர், சேலம், திருப்பூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து 3449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.
மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையினைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தேங்கியிருந்த குப்பை மற்றும் தோட்டக்கழிவுகளை அகற்றி சுத்தம் செய்திடும் வகையில், திருநெல்வேலி மண்டலத்தில் 173 நபர்கள், மதுரை மண்டலத்தில் 287 நபர்கள், தஞ்சாவூர் மண்டலத்தில் 185 நபர்கள், வேலூர் மண்டலத்தில் 396 நபர்கள், வேலூர் மாநகராட்சியில் 107 நபர்கள், சேலம் மண்டலத்தில் 91 நபர்கள், சேலம் மாநகராட்சியில் 220 நபர்கள், திருப்பூர் மண்டலத்தில் 225 நபர்கள், திருப்பூர் மாநகராட்சியில் 133 நபர்கள், செங்கல்பட்டு மண்டலத்தில் 4 நபர்கள், கோயம்புத்தூர் மாநகராட்சியில் 414 நபர்கள், ஈரோடு மாநகராட்சியில் 113 நபர்கள், திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 260 நபர்கள் என மொத்தம் 2,608 தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் 22,075 தூய்மைப் பணியாளர்களும், தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். மிக்ஜாம் மற்றும் கனமழையின் காரணமாக 46,727.66 மெட்ரிக் டன் குப்பை மற்றும் தோட்டக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட குப்பைகள் மற்றும் தோட்டக் கழிவுகளை அகற்றிட தாம்பரம் மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், பொன்னேரி, திருநின்றவூர், மாங்காடு, பூந்தமல்லி மற்றும் திருவேற்காடு பகுதிகளில் 841 தூய்மைப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டு, குப்பைகள் மற்றும் தோட்டக்கழிவுகள் அகற்றப்பட்டன.
கடினமான இச்சூழ்நிலையில் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்து வந்து குப்பைகளை அகற்றிடும் பணிகளை மேற்கொண்ட 3449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களை முதலமைச்சர் பாராட்டி ஊக்கத்தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.












Click it and Unblock the Notifications