பாஜக-திமுக கூட்டணி.. கிளப்பி விட்ட வதந்திகள்.. ஒரே நாளில் சல்லிசல்லியாக நொறுக்கிய ஸ்டாலின்!
சென்னை : சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி இரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போதும் அதில் பங்கு பெற்ற முதல்வர் ஸ்டாலின் அரசியல் பேசாத நிலையில் திமுக பாஜக கூட்டணி வரப்போவதாக யூகங்கள் கிளம்பின. இந்நிலையில் இன்று கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் கலந்து கொண்ட முதல்வர் பிரதமரை மறைமுகமாக தாக்கி பேசியதோடு கூட்டணி குறித்து வெளியிட்ட அறிக்கை திமுக பாஜக கூட்டணி குறித்தான விமர்சனங்களை தவிடு பொடியாக்கியுள்ளது என்கின்றனர் உடன்பிறப்புகள்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காகவும் சென்னை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தமிழகம் வந்தார்.
கடந்த முறை போல பிரதமர் வருகையின் போது கோ பேக் மோடி என்ற முழக்கம் அவ்வளவாக திமுகவினரால் பரப்பப்படாத நிலையில் சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததாகவும் கூறப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி
மேலும் இந்த இரு நிகழ்ச்சிகளிலும் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொண்டார். கடந்த முறை பிரதமர் வந்திருந்த போது மத்திய அரசு குறித்த வெளிப்படையான விமர்சனங்களை முதல்வர் ஸ்டாலின் தனது பேச்சின் அவ்வப்போது குறிப்பிட்டார். மேலும் ஒன்றிய அரசு என்று பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேசியது பரபரப்பை கிளப்பியது. பிரதமரின் தற்போது வருகையின் போதும் இரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதல்வர் பிரதமரை அவ்வளவாக ஏன் முற்றிலுமாக விமர்சிக்கவில்லை.

விமர்சனம் இல்லை
ஒன்றிய அரசு என சில இடங்களில் குறிப்பிட்டாலும் பிரதமர் மோடியை மட்டும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என குறிப்பிட்டதோடு 20,000 வீரர்களைக் கொண்டு செஸ் போட்டியை நடத்தியவர் என பல இடங்களில் புகழாரம் சூட்டினார். மேலும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் பிரதமர் மோடியை முதல் ஸ்டாலினும் அமைச்சர் பொன்முடியோ விமர்சிக்கவில்லை .இந்நிலையில்தான் திமுக பாஜக கூட்டணி உருவாகப் போவதாகவும் அதற்காகவே பிரதமரை முதல்வர் ஸ்டாலின் விமர்சிக்கவில்லை என யூகங்கள் கிளம்பின. பிரதமர் மோடி ஸ்டிக்கர் மீது கருப்பு மை பூசியவர்களை கைது செய்துவிட்டு, ஸ்டிக்கர் ஒட்டியவர்களை கைது செய்யாமல் விட்டதாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி காட்டமாக அறிக்கை விட்டதும், திமுக-பாஜக நெருங்கிவிடுமோ என்ற அச்சத்தால்தான் என்றும், வதந்திகள் கிளப்பப்பட்டன.

தெளிவுபடுத்திய முதல்வர்
இதனை பாஜக தலைவர் அண்ணாமலை மறுத்த நிலையிலும் தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் பல்வேறு ஊடகங்களிலும் கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தன. இந்த நிலையில் இன்று இரண்டு நிகழ்வுகள் மூலம் அந்த கருத்துக்களை அடித்து தூள் தூளாக்கி இருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் முதலாவதாக மலையாள பத்திரிக்கை நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, இந்தியா என்பது பலதரப்பட்ட கலாச்சாரம் பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழும் நாடு இங்கு சிலர் ஒரே மொழியை திணிக்க முயற்சிக்கின்றனர் என இந்தி மொழி திணிப்பு குறித்து மறைமுகமாக மத்திய அரசையும் பாஜகவையும் விமர்சித்தார்.

கூட்டணி இல்லை
அடுத்ததாக திமுக தலைமையிலான கூட்டணி தொடரும் எனவும் இது கொள்கைக்கான கூட்டணி என வெளிப்படையாக தெரிவித்தார் முதல்வர். இதன் மூலம் தமிழகத்திலும் காங்கிரஸ் மதிமுக விசிக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி தொடரும் என உறுதியாக தெரிவித்துள்ளார் முதல்வர். இதன் மூலம் கடந்த காலங்களில் காங்கிரஸ் விசிக உள்ளிட்ட கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாக வெளியான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியையும் முதல்வர் உறுதிப்படுத்தியுள்ளார். அதே நேரத்தில் பாஜகவுடன் இனி கூட்டணி கிடையாது என உறுதியாக முதல்வர் கூறியுள்ளதாகவும் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications