பயணம் உலகத்தைக் காண்பதற்கான ஜன்னல்! பயணத்தைப் போன்ற சிறந்த ஆசிரியர் இருக்க முடியாது! -ஸ்டாலின்
சென்னை: பயணம் என்பது உலகத்தைக் காண்பதற்கான ஜன்னல் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாம் அறியாத பல செய்திகளை நமக்கு நேரடியாகக் கற்றுத் தருவதற்குப் பயணத்தைப் போன்ற சிறந்த ஆசிரியர் இருக்க முடியாது என அவர் விவரித்துள்ளார். தனது ஸ்பெயின் பயணம் பற்றி விமானத்தில் பறந்தவாறு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம் வருமாறு;

'' மேகங்களின் மீது மிதப்பது போன்ற உணர்வுடன், வானில் பறக்கின்ற விமானத்திலிருந்து இந்தக் கடிதத்தை எழுதத் தொடங்குகிறேன். பத்து நாள் பயணத்திற்கிடையில் உடன்பிறப்புகளாம் உங்களின் நினைவு எழாத நாளுமில்லை, நேரமுமில்லை. பயணத்தின் விவரங்களையும், அங்கு நடந்த நிகழ்வுகளையும், பயணத்தின் இலக்கில் அடைந்த வெற்றியையும் உடன்பிறப்புகளான உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் விருப்பத்துடன் ஆகாய வீதியில் பயணித்தபடி இந்த விரிவான கடிதத்தை எழுதுகிறேன். ''
''ஸ்பெயின் நாடு தன் வரலாற்றையும் பண்பாட்டையும் பாதுகாப்பதுடன் மொழியையும் வளப்படுத்தி உலகம் முழுவதும் பரவச் செய்திருப்பதைக் கண்டு வியந்தேன். நாலே முக்கால் கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டிற்கு, 9 கோடி சுற்றுலாப் பயணிகள் வருவதற்கான அடிப்படைக் காரணம், உலகமெங்கும் பரவியுள்ள ஸ்பானிஷ் மொழிதான். ''
''பயணம் என்பது உலகத்தைக் காண்பதற்கான ஜன்னல். நாம் அறியாத பல செய்திகளை நமக்கு நேரடியாகக் கற்றுத் தருவதற்குப் பயணத்தைப் போன்ற சிறந்த ஆசிரியர் இருக்க முடியாது. அதனை இந்தப் பத்து நாள் ஸ்பெயின் பயணத்தில் முழுமையாக அறிந்தேன். பயணத்தில் இருந்தாலும் எனக்குள்ள பொறுப்புகளையும் அதற்குரிய பணிகளையும் மறந்துவிடவில்லை. தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய தருணம் நெருங்கி வருவதால் அது குறித்துக் காணொலி வாயிலாக அமைச்சர்களுடனும் அதிகாரிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டேன். ''
''ஸ்பெயின் பயணம் வெற்றிகரமாக அமைந்ததுபோல, தேர்தல் களத்தில் 'இந்தியா'வின் வெற்றியும் அமையும். தமிழ்நாடு வளம் காணும். இந்தியாவின் ஜனநாயகம் காக்கப்பட்டால்தான் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களின் வளர்ச்சியும் நிரந்தரமாக அமையும். அதற்கான களம் நம்மை அழைக்கிறது. ஆயத்தமாவோம்!''












Click it and Unblock the Notifications