முதல்வர் விஜய் சார்.. ஆவினை காப்பாற்றுங்கள்.. வலுவாக எழும் ஊழியர்களின் குரல்
சென்னை: ஆவின் பாலைத் தொடர்ந்து ஆவின் நெய் மற்றும் வெண்ணெய்க்குத் தட்டுப்பாடு நிலவுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஆவின் பாலகங்களுக்கு ஒரு நாளைக்கு 20 முதல் 30 லிட்டர் நெய் மட்டுமே விநியோகம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு ஆவின் நிறுவனம் ரூ. 273.75 கோடி இழப்பைச் சந்தித்து வருகிறது. அதாவது, ஒரு நாளைக்கு ரூ. 75 லட்சம் இழப்பை ஆவின் சந்திக்கிறது. இப்படியே போனால் ஆவின் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என்றும், ஆவின் நிறுவனத்தைக் காப்பாற்ற அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இன்றைக்குத் தனியார் பால் நிறுவனங்கள் ஓரளவு விலை உயர்த்தாமல் கட்டுப்பாட்டுடன் இயங்குவதற்குக் காரணமே ஆவின் பால் நிறுவனம்தான். ஆவின் நிறுவனம் மட்டும் இல்லையென்றால், தனியார் நிறுவனங்கள் பால் மற்றும் பால் பொருட்களின் விலையைக் கடுமையாக உயர்த்தியிருக்கும். மேலும், ஆவின் நிறுவனம் கிராமப்புறங்களில் உள்ள லட்சக்கணக்கான சிறு, குறு பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு நிலையான மற்றும் நம்பகமான வருமான ஆதாரமாக விளங்குகிறது. கர்நாடகாவிற்கு 'நந்தினி', குஜராத்திற்கு 'அமுல்' எப்படியோ, அதுபோலத்தான் தமிழ்நாட்டிற்கு 'ஆவின்'.

ஆவின் சந்தையில் இருப்பதால்தான் சந்தை விலை நிலைத்தன்மையுடன் இருக்கிறது; தனியார் நிறுவனங்கள் பால் மற்றும் பால் பொருட்களின் விலையைத் தன்னிச்சையாக, மிக அதிகமாக உயர்த்த முடியாமல் ஒரு கட்டுப்பாட்டுடன் வைக்க முடிகிறது. ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்குக் குறைந்த விலையில் பால் பொருட்களை வழங்குவதில் ஆவின் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், அண்மைக்காலமாக ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பால் கிடைக்காமல் தனியார் பாலை வாங்குகின்றனர். இதனால் தனியார் பாலுக்கு ₹10 வரை அதிகமாகக் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. ஆவின் பால் குறைந்த அளவே கிடைக்கும் சூழலில், ஆவின் நெய்த் தட்டுப்பாடும் நிலவி வருகிறது.
இது குறித்து ஆவின் பாலகத்தின் விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், "ஆவின் நெய்யும் கடந்த 2 மாதங்களுக்கு மேலாகத் தட்டுப்பாடாகவே இருக்கிறது. 5 லிட்டர் ஆவின் நெய் டப்பா விநியோகத்தைக் கடந்த 7, 8 மாதங்களுக்கு முன்பிருந்தே நிறுத்திவிட்டார்கள். தற்போது, கடந்த 2 மாதங்களாக 1 லிட்டர் நெய் டப்பாவும் வருவதில்லை. எனினும், 1 லிட்டர் நெய் பாக்கெட் கிடைக்கிறது. அதுவும் ஒரு நாளைக்கு 20 முதல் 30 லிட்டர் மட்டுமே தருவதாகக் கூறப்படுகிறது. தேவை அதிகமாக இருந்தாலும், அதற்கு ஏற்ற உற்பத்தி இல்லை.
அதேபோன்று ½ லிட்டர் நெய் டப்பாவும் குறைவாகவே கிடைக்கிறது. போதிய உற்பத்தி இல்லாததால் வழங்க முடியாத நிலை உள்ளது என்று கூறுகிறார்கள். மேலும், ஆவின் விற்பனை செய்து வந்த வெண்ணெய், சந்தையில் தற்போது விற்பனைக்கே வருவதில்லை" என்றார்.
இது குறித்து ஆவின் வட்டாரங்கள் கூறும்போது, "கடந்த ஆட்சியின் போது ஆவின் பால் விலை ரூ. 3 குறைக்கப்பட்டது. பொதுவாக பால் விலையைக் குறைப்பதாக அறிவிக்கும்போது, சமன்படுத்தப்பட்ட நீல நிற பால் பாக்கெட் மட்டுமே விலை உயர்த்தப்படுவது வழக்கம்; மற்ற பால் பாக்கெட்களின் விலை உயர்த்தப்படுவதில்லை. ஆனால், ரூ. 3 விலை குறைக்கப்பட்டதன் மூலம், ஒரு நாளைக்குத் தமிழ்நாடு முழுவதும் 25 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது என்றால், ஒரு லிட்டருக்கு ரூ. 3 வீதம் ஒரு நாளைக்கு ரூ. 75 லட்சம் ஆவின் பால் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்பட்டது.
அதன்படி, ஒரு ஆண்டுக்கு ரூ. 273.75 கோடி இழப்பு ஏற்படத் தொடங்கியது. இந்த இழப்பைச் சரிசெய்ய அரசு மானியம் வழங்க வேண்டும். ஆனால் அரசு மானியம் வழங்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக ஆவின் பால் நிறுவனப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படவில்லை; நிலுவைத் தொகையும் வழங்கப்படவில்லை.
அதேபோல பால் கொள்முதல் விலையும் கடந்த 5 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. இதனால், விவசாயிகள் வெளிச்சந்தையில் ஆவினை விட ரூ. 6 அதிக விலைக்கு பாலை விற்கிறார்கள். இதன் காரணமாக பால் கொள்முதல் அளவும் குறைந்துவிட்டது. பாலின் அளவு குறைந்துவிட்டதால், பால் சார்ந்த பொருட்களின் உற்பத்தியும் பெருமளவு குறைந்துவிட்டது. இதனாலேயே ஆவின் நெய்க்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் லாபகரமாக இயங்குவதற்குக் கூடுதல் விலைக்கு பால் விற்பனை செய்வதே காரணம். எனவே, ஆவின் பால் விற்பனை விலையைக் கூட்டுவதுடன், விவசாயிகளுக்கு வழங்கும் கொள்முதல் விலையையும் கூட்ட வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே ஆவினைக் காப்பாற்ற முடியும்" என்றனர்.
கர்நாடக அரசின் 'நந்தினி', குஜராத்தின் 'அமுல்' ஆகிய நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் தொழில்முறை முடிவுகளில் அரசியல் மற்றும் அரசுத் தலையீடு மிகக் குறைவாகவே உள்ளது. ஆனால், ஆவினைப் பொறுத்தவரை கொள்முதல் மற்றும் விற்பனை விலையை நிர்ணயிப்பதில் அரசின் அதிகக் கட்டுப்பாடு இருக்கிறது. இதுவே ஆவினின் தேக்கநிலைக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல் அமுல், நந்தினி போன்ற நிறுவனங்கள் கொள்முதல் விலையை அவ்வப்போது உயர்த்தி விவசாயிகளை ஈர்க்கின்றன; உபரி லாபத்தை விவசாயிகளுக்கும் வழங்குகின்றன. அதனால் அமுல், நந்தினியை மக்கள் விரும்புகிறார்கள். ஆனால், ஆவினில் அந்த நிலை இல்லை.
கொள்முதல் விலை அவ்வப்போது உயர்த்தப்படாததால் விவசாயிகள் தனியார் பால் நிறுவனங்களை நாடுகிறார்கள். அதேபோல அமுல், நந்தினி நிறுவனங்கள் பால் மட்டுமன்றி ஐஸ்கிரீம், சீஸ், சாக்லேட், புரோட்டீன் பானங்கள் என அதிக லாபம் தரும் பொருட்களில் கவனம் செலுத்துகின்றன. ஆனால் ஆவினோ, பால் கொள்முதலைக் குறைத்ததுடன் நெய், வெண்ணெய் போன்றவற்றையே தயாரிக்க முடியாமல் தடுமாறுகிறது. எனவே, இந்தத் தட்டுப்பாட்டைச் சரிசெய்து ஆவின் நிறுவனத்தை உடனடியாக மறுசீரமைக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications
