சென்னை மக்களே அலர்ட்.. இன்று ஒருநாள் மெட்ரோவில் இலவச பயணிக்கலாம்! ஆனா ஒரு கண்டிஷன்! பம்பர் அறிவிப்பு
சென்னை: இன்று உலகக் கோப்பை தொடரில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நிலையில், இன்று போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்தால் மெட்ரோவில் இலவசமாகப் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஒரு வழியாக ஆரம்பித்துவிட்டது. அதுவும் இந்தாண்டு இந்தியாவிலேயே உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுகிறது.

கடந்த 2011க்கு பிறகு முதல்முறையாக உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் நிலையில், ரசிகர்கள் பயங்கர உற்சாகத்தில் உள்ளனர். இதற்கு பொதுமக்களிடையே ஆர்வமும் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
உலக கோப்பை போட்டிகள்: உலகக் கோப்பை போட்டிகள் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்தது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அதில் 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் பவுலிங்கை தும்சம் செய்த நியூசிலாந்து மிக எளிதாக வெற்றி பெற்றது. இப்போது வரை 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் டாப் இடத்தில் உள்ளன.
இதற்கிடையே இந்த உலகக் கோப்பையில் இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. உலகக் கோப்பையின் ஐந்தாவது ஆட்டமான இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இன்று பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்தப் போட்டியின் மீது எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. இதற்கிடையே இன்று சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரசிகர்கள் கவலையடைந்தனர். இருப்பினும், மழையால் போட்டி பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை என்றே வானிலை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பார்கிங் பிரச்சினை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தைப் பொறுத்தவரை அது மற்ற மைதானங்களைப் போல இல்லாமல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் பார்கிங் என்பது மிகப் பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது. இதற்குப் பல ஏற்பாடுகள் செய்யப்படும் போதிலும், வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக இருப்பதால் இதைத் தீர்க்கவே முடிவதில்லை. இதற்கு ஒரு தீர்வாகவே கடந்த ஐபிஎல் சீசனில் டிக்கெட் எடுத்தோர் இலவசமாகப் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அதேபோல இந்த உலகக் கோப்பைக்கும் இலவச பயணம் அறிவிக்கப்படுமா என்பது பலரது கேள்வியாக இருந்தது. இருப்பினும், ஐபிஎல் போல இல்லாமல் உலகக் கோப்பை போட்டிகளை முழுக்க முழுக்க ஐசிசி நடத்துவதால் இலவச பயணம் இருக்குமா என்பதில் கேள்வி இருந்தது. இதற்கிடையே புதிய அறிவிப்பு ஒன்று வந்துள்ளது. அதன்படி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்டை காண்பித்தால் மெட்ரோ ரயிலில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவசமாகப் பயணிக்கலாம்: போட்டி முடிந்த பிறகு ரசிகர்கள் பொதுமக்கள் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல வேண்டி இருக்கும் நிலையில், அவர்கள் இந்த மெட்ரோ டிக்கெட்டை காண்பித்து இலவசமாகப் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இன்றைய தினம் மெட்ரோ ரயில்கள் இரவு 12 மணி வரை இயக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், மேட்ச்சை பார்த்துவிட்டுக் கிளம்பும் சமயத்தில் மட்டுமே இந்த இலவச டிக்கெட் சலுகை பொருந்தும் என்றும் போட்டியைக் காண மைதானத்திற்கு வரும் போது இந்த சலுகை பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications