எல்லா பக்கமும் கேட்.. பொதுக்குழுவுக்கு தடைகோரிய மனுவை தள்ளுபடி செய்தது உரிமையியல் நீதிமன்றம்-போச்சா?
சென்னை : ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உரிமையியல் நீதிமன்றம்.
அதிமுக பொதுக்குழு நடத்தப்படுவதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், வாதங்களை முழுமையாக கேட்டபிறகு தீர்ப்பு வரும் ஜூலை 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சூரியமூர்த்தி என்பவர் பொதுக்குழுவை நடத்த தடை விதிக்க வேண்டும் என சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த மற்றொரு வழக்கை தற்போது நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி, ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை தொடர்ந்து 2வது நாளாக சென்னை உயர்நீதிமன்றம், இன்று விசாரித்தது. இந்த விசாரணையின்போது எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் விறுவிறுப்பான வாதத்தை முன்வைத்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜூலை 11ஆம் தேதி காலை 9 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். அதிமுக பொதுக்குழு 9.15 மணிக்கு நடைபெறவிருக்கும் நிலையில் அதற்கு கால் மணி நேரம் முன்னதாக தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

அதிமுக பொதுக்குழு
இதற்கிடையே, அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் இருந்த அதிகாரமிக்க பொதுச் செயலாளர் பதவியைக் கலைத்துவிட்டு, முறையாகத் தேர்தல் நடைமுறைகளைக் கையாளாமல் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டது எனக்கூறி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் 23வது உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நிலுவையிலிருந்த நிலையில், ஜூன் 23-ல் பொதுக்குழுக் கூட்டம் நடத்தத் தடை விதிக்கக் கோரிய கூடுதல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின்னர் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், ஜூலை 11ஆம் தேதி அடுத்த பொதுக்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இன்று விசாரணை
அதிமுக நிர்வாகிகள் தேர்தலை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலும், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவும் வரும் 11-ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால், அக்கூட்டத்தை நடத்த ஒ.பி எஸ், ஈ.பி.எஸ் ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டுமென புதிதாக கூடுதல் மனுவைத் தாக்கல் செய்தார் சூரிய மூர்த்தி. இந்த மனு சென்னை 23வது உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி தாமோதரன் முன்பு, விசாரணைக்கு வந்தது.

உறுப்பினரே இல்லை என வாதம்
எடப்பாடி பழனிச்சாமி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மனுதாரர் கட்சியின் உறுப்பினர் இல்லை என்பதால் இந்த வழக்கைத் தாக்கல் செய்ய உரிமை இல்லை என தெரிவிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் செல்லாது எனக் கூறும் மனுதாரர், பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்குத் தான் அதிகாரம் உள்ளது என முரண்பாடாகத் தெரிவித்துள்ளதால் இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

மனு தள்ளுபடி
இதையடுத்து பொதுக்குழுவுக்குத் தடை கோரிய சூரிய மூர்த்தி மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். பொதுக்குழுவுக்குத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த மனுவில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்காத நிலையில், இன்று பொதுக்குழுவுக்கு தடை கோரிய இன்னொரு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், ஒரே நம்பிக்கையாக ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்துக்கு 15 நிமிடங்கள் முன்னதாக அளிக்கப்பட இருக்கும் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளார் ஓபிஎஸ்.












Click it and Unblock the Notifications