மாசமா இருக்க பொண்ணுன்னு கூட பாக்காம.. சென்னையில் தவெகவினரை தாக்கிய திமுகவினர்.. என்ன நடந்தது?
சென்னை: சென்னை பாரிமுனையில் அனுமதி இன்றி சர்வே எடுக்க வந்த தவெகவினரை திமுகவினர் தடுத்து கேள்வி எழுப்பிய நிலையில் அவர்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தவெகவை சேர்ந்தவர்களை தாக்கியதில் அவர்கள் 5 பேர் காயமடைந்து ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து காயமடைந்த பெண்ணின் தாய் கூறுகையில், சர்வே எடுக்க போனாங்க.. திமுகவினர் அடித்து தாக்கியிருக்காங்க.. என் மகள் 4 மாத கர்ப்பிணி.. இப்போ மருத்துவமனையில் வலியில் அலறிக்கொண்டு இருக்கா.." என்று கண்ணீருடன் கூறினார்.

விஜய்க்கு ஆதரவு எப்படி இருக்கு?
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த முறை நான்கு முனை போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக தலமையிலான கூட்டணிகள், தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுவதல் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்த முறை முதல் முறையாக தவெக களம் காண்கிறது. இதனால், தமிழகம் முழுவதும் தொகுதிவாரியாக மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது? என்பதை அக்கட்சி நிர்வாகிகள் சர்வே எடுத்து வருகிறார்கள். அதன்படி சென்னை துறைமுகம் தொகுதியில் மக்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறது? தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு எப்படி இருக்கிறது? என்பது உள்பட கேள்விகளுடன் தவெகவை சேர்ந்த 5 பேர் பாரிமுனை அங்கப்பன் தெருவில் சர்வே எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அனுமதி பெறப்பட்டதா என திமுகவினர் கேள்வி
இதுபற்றி தகவலறிந்து அப்பகுதியை சேர்ந்த திமுகவினர் திரண்டனர். 'சர்வே' எடுக்க முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திமுகவினருக்கும் தவெகவினருகும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் தவெகவின் மண்ணடியைச் சேர்ந்த தங்கபாண்டியன் (வயது 30), அவரது சகோதரி பவானி (26), மண்ணடி ஆதாம் தெருவைச் சேர்ந்த ஜாபர் உசேன் (36), பாரிமுனை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த திலிப் (30), கொண்டித்தோப்பைச் சேர்ந்த முகேஷ் (41) ஆகிய 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் 5 பேரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தவெக சார்பில் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
4 மாத கர்ப்பிணி என்றும் பாராமல்
'சர்வே'யில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை திமுகவினர் தாக்கிய 'வீடியோ' காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் காயம் அடைந்தவர்களை தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.

இது குறித்து காயமடைந்த பெண்ணின் தாய் கூறுகையில், காலையில் 9 மணியளவில் என் பசங்க எல்லாரும் சர்வே எடுக்க போனாங்க.. அப்போது அவர்கள் ஜூஸ் குடித்துக்கொண்டிருக்கும் போது திமுகவினர் தாக்குதல் நடத்திட்டாங்க.. என் மகள் 4 மாத கர்ப்பிணி.. இப்போ மருத்துவமனையில் வலியில் அலறிக்கொண்டு இருக்காங்க.. என கண்ணீருடன் கூறினார்.
70 பேர் வந்தார்கள்
தீபப் பிரியா கூறுகையில், என் கணவர் பெயர் தங்கப் பாண்டியன். எங்களை தாக்கியவர் திமுக வட்ட செயலாளர் கவியரசு தான். நாங்க சர்வே எடுக்க சென்றபோது தவெக துண்டினை தோளில் போட்டு இருந்தோம். அங்கே நின்று ஜூஸ் குடித்துக்கொண்டு இருந்தோம். அப்போது அங்கே திமுகவினர் வந்தாங்க.. இங்கே ஏன் வந்து சர்வே எடுக்குறீங்க.. இங்கே எடுக்ககூடாது.. என சொன்னாங்க..
60 வது வட்டத்துக்கு வருவதற்கு நீங்க யாரு.. எல்லாமே இங்க வாங்கி திங்குறீங்க.. அங்கே போய் எடுக்கீங்களா என கேட்டாங்க.. நாங்க என்ன வாங்கி சாப்பிட்டோம் என கேட்டபோது ஒரு 70 பேர் வந்தார்கள். எங்கள் மீது தாக்குதல் நடத்தினாங்க.. என் கணவர் சீரியசாக படுத்து இருக்கிறார். கர்ப்பிணி மீது தாக்குதல் நடத்தினாங்க.. என்று கூறினார்.












Click it and Unblock the Notifications