சாத்தான்குளம் தந்தை- மகன் மரணமடைந்த சம்பவம்.. ரூ 20 லட்சம் நிவாரணம், அரசு வேலை- முதல்வர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாத்தான்குளத்தில் விசாரணை கைதிகளாக அழைத்து செல்லப்பட்ட தந்தை-மகன் மரணமடைந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்காக தலா ரூ 10 லட்சம் என மொத்தம் ரூ 20 லட்சம் வழங்கப்படும் என்றும் அந்த குடும்பத்தில் தகுதிக்கேற்ப ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

Recommended Video

    சாத்தாங்குளம் தந்தை மகனுக்கு நடந்தது என்ன? ஜெயராஜ் மனைவி கதறல்

    இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறுகையில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல்நிலைய காவலர்கள் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு ஊரடங்கு பணியாக சாத்தான்குளம் கடைவீதியில் கடந்த 19.06.2020 அன்று ரோந்தில் ஈடுபட்டிருந்தபோது, திரு.ஜெயராஜ் (வயது 58) என்பவர் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து அவரது கைப்பேசி கடையை திறந்து வைத்திருக்க, கடையின் முன்பு திரு.ஜெயராஜ், அவரது மகன் திரு.பென்னிக்ஸ் (வயது 31) மற்றும் சிலர் கூட்டமாக நின்றிருந்துள்ளனர்.

    ரோந்து காவலர்கள் அவர்களை கடையை மூடிவிட்டு, கலைந்து செல்லுமாறு கூறியபோது, மற்றவர்கள் உடனே கலைந்து சென்றுவிட்டனர் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கடையை மூட மறுத்துவிட்டதால், இச்சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ்
    மற்றும்பென்னிக்ஸ் ஆகியோர் மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    போலீஸ்

    போலீஸ்

    சாத்தான்குளம் காவல் துறையினர் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை 19.06.2020 அன்று இரவு கைது செய்து, 20.06.2020 அன்று அதிகாலை சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவில்பட்டி கிளை சிறைச்சாலையில் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இந்நிலையில், 22.06.2020 அன்று இரவு 7.35 மணிக்கு சிறையில் இருந்த திரு.பென்னிக்ஸ் தனக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாக கூறியதையடுத்து, சிறைக் காவலர்கள் பென்னிக்சை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

    கோவில்பட்டி

    கோவில்பட்டி

    பென்னிக்ஸ் சிகிச்சை பலனின்றி இரவு 9.00 மணியளவில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், 23.06.2020 அன்று அதிகாலை சிறையில் இருந்த திரு.பென்னிக்சின் தந்தை ஜெயராஜ் தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததையடுத்து, சிறை காவலர்கள் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். சிகிச்சையில் இருந்த திரு.ஜெயராஜ் அன்று காலை 5.40 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    சிறையில் அடைப்பு

    சிறையில் அடைப்பு

    நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகியோர் உயிரிழந்தது தொடர்பாக, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கோவில்பட்டி நீதித்துறை நடுவர் எண்.1 அவர்களின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது. இதனையடுத்து 23.06.2020 அன்று, ஜெயராஜின் உறவினர்கள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழப்புக்கு காரணமான காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து, அக்குடும்பத்தினருக்கு நிவாரணம் அளிக்க வேண்டுமென்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென்றும் கோரி, சாத்தான்குளம் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டு பின்னர் அதிகாரிகள் தலையீட்டின் பேரில் கலைந்து சென்றனர்.

    பிரேத பரிசோதனை

    பிரேத பரிசோதனை

    இதற்கிடையே, ஜெயராஜின் மனைவி செல்வராணி தனது கணவர் மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்தது தொடர்பாக, அவர்களது பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய உத்தரவிடக் கோரி மனு ஒன்றை 23.06.2020 அன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தார். அம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, திருநெல்வேலி அரசு மருத்துவமனை முதல்வர், உயிரிழந்த நபர்களின் பிரேத பரிசோதனையை, மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு மூலம் நடத்தவும், அதனை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டது.

    விசாரணை

    விசாரணை

    இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இச்சம்பவம் குறித்து தானாக முன்வந்து இன்று (ஜூன் 24) விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. விசாரணையின் போது, தென்மண்டல காவல்துறைத் தலைவர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஆஜராகி, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சாத்தான்குளம் காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேசன் மற்றும் தலைமைக் காவலர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    வழக்கு ஒத்திவைப்பு

    வழக்கு ஒத்திவைப்பு

    வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழக்கு குறித்து நிலவர அறிக்கை தாக்கல் செய்யவும், பிரேத விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்து அதன் அறிக்கைகளை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, இவ்வழக்கை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்று தெரிவித்து, மனுவை 26.06.2020க்கு ஒத்திவைத்தனர். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் இறந்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் கோயில்பட்டி நீதித்துறை நடுவர் எண்.1 அவர்கள் பிரேத புலன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    இச்சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இச்சம்பவம் குறித்து விசாரித்து வரும் நீதித்துறை நடுவர் அவர்களின் அறிக்கையின் பேரிலும் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இது தொடர்பாக பிறப்பிக்க உள்ள உத்தரவின் அடிப்படையிலும், இச்சம்பவத்தில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

    அரசுப் பணி

    அரசுப் பணி

    உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாயினை முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கவும், மேலும், அக்குடும்பத்தில் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தகுதிக்கேற்ப ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+