இதுதான் பெரிய சிக்சர்..’நலம் காக்கும் ஸ்டாலின்’ தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்! இவ்வளவு சிறப்பா?
சென்னை: 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம்களை தொடர்ந்து பொதுமக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை மற்றும் பல்வேறு நோய் பாதிப்புகளை முன்னரே கண்டறியும் பொருட்டு 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் நடைபெறும் முகாம்களில் பரிசோதனை செய்யப்படும் பொதுமக்களுக்கு, பரிசோதனைக்கான முடிவுகள் வாட்ஸாப் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் சார்பில் பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, வருமுன் காப்போம், இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல் மக்களை தேடி மருத்துவ ஆய்வக திட்டம், தொழிலாளர்களை தேடி மருத்துவ திட்டம், சிறுநீரகம் காக்கும் சீர்முகத் திட்டம், புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் என மிகப் பெரிய அளவிலான சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆலோசனைப்படி நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. சென்னை மயிலாப்பூர் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்வில் இந்தத் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஏற்கனவே பல்வேறு சுகாதார திட்டங்கள் தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டம் மக்களிடையே மிகப்பெரும் கவனம் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்கள் உடல் நலனை பாதுகாத்திடும் வகையில் மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனை செய்து வருகின்றனர். ஏற்கனவே மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தொற்றா நோய்களுக்கான மருந்துகள் வழங்கப்படுகிறது. இதே போல இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் 48 திட்டம் இந்தியாவுக்கே முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டும் வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மக்களை தேடி முழு உடல் பரிசோதனை திட்டம் என்ற வகையில் செயல்படுத்தப்பட இருக்கிறது.
பொதுமக்கள் மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது என்றால் 15,000 வரை செலவாகும். அரசு மருத்துவமனைகளில் கூட 4000 ரூபாய் வரை செலவாகும். அதே நேரத்தில் முழு உடல் பரிசோதனை இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று என்பதால் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறுயியல், மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதயவியல், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம் மற்றும் இந்திய முறை மருத்துவம் ஆகியவை இந்த திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட இருக்கிறது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல் புற்றுநோய் பாதிப்புகளை கண்டறியும் வகையில் கருப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் என ஆண் பெண் இரு பாலருக்குமான புற்றுநோய் பாதிப்புகளை கண்டறியும் பணியும் இந்த முகாம்களில் நடைபெற இருக்கிறது.
தமிழ்நாட்டில் 388 ஒன்றியங்களில் அதாவது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மூன்று என்கிற வகையில் 1164 முகாம்கள் நடத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் 15 இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்படுகிறது. சென்னைக்கு அடுத்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஐந்து மாநகராட்சியில் தலா நான்கு விதம் 20 முகாம்களும், 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட 19 மாநகராட்சிகளில் தலா மூன்று விதம் 57 முகாம்கள் நடத்தப்படுகிறது. ஆக மொத்தம் 1256 முகாம்கள் இந்த திட்டத்தின் திட்டத்தின் கீழ் நடத்தப்படுகிறது. ஓராண்டு காலத்திற்கு பொதுமக்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மட்டுமே இந்த முகாம்கள் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இந்த திட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications