லீகல் தலைநகர்?.. எதிர்பாராத கோரிக்கையை வைத்த முதல்வர்.. இதுமட்டும் சென்னையில் நடந்தால்.. மாஸ்தான்!
சென்னை: நேற்று பிரதமர் மோடியை சந்தித்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் 22 கோரிக்கைகளை வைத்தார். இதில் சென்னை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கை ஒன்று அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
நேற்று பிரதமர் மோடிக்கும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. 25 நிமிடங்கள் இவர்கள் இருவரும் ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனையில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டது.
தமிழ்நாடு முதல்வராக பதவி ஏற்றபின் முதல்முறை ஸ்டாலின் பிரதமருடன் சந்திப்பு நடத்தி உள்ளார். 25 முக்கியமான கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் இந்த ஆலோசனையில் பிரதமரிடம் வைத்தார்.

என்ன கோரிக்கை
இந்த சந்திப்பில் நீட் தேர்வு ரத்து, செங்கல்பட்டில் வேக்சின் தயாரிப்பு, ஆறுகள் இணைப்பு, மூன்று வேளாண் சட்ட ரத்து, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை வேகமாக அமைப்பது, கோவையிலும் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பது என்று பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் இதில் வைத்தார்.

சென்னை
இதில் சென்னையில் உச்ச நீதிமன்ற கிளையை அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். டெல்லியில் உச்ச நீதிமன்றம் இருக்கும் நிலையில் சென்னையில் இதன் கிளையை அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். 2009ல் அமைக்கப்பட்ட முக்கியமான கமிஷன் ஒன்றின் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் இந்த கோரிக்கை வைத்துள்ளார்.

கமிஷன்
18வது சட்ட கமிஷன் 2009ல் வைத்த பரிந்துரையின் அடிப்படையில் இந்தியாவில் சென்னை (அல்லது ஹைதராபாத்), கொல்கத்தா, மும்பை ஆகிய மூன்று மாநிலங்களில் கூடுதலாக உச்ச நீதிமன்ற கிளை அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை வழங்கியது. இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் முதல் நபராக இந்த கோரிக்கையை பிரதமரிடம் வைத்துள்ளார்.

லா கமிஷன்
சட்ட கமிஷன் செய்த பரிந்துரையை செயல்படுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். இது ஒரு வகையில் சென்னைக்கு பெரிய அளவில் முக்கியத்துவத்தை கொடுக்கும். சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்கப்பட்டால் தென் மாநில வழக்குகள் அனைத்தும் இங்கேயே விசாரிக்கப்படும். இது தென் மாநிலங்களுக்கு இடையில் சென்னையை அதிக முக்கியத்துவம் பெற வைக்கும்.

சென்னை முக்கியம்
தெலுங்கானா, கர்நாடகா, கோவா, ஆந்திர பிரதேசம், கேரளா ஆகிய மாநிலத்தின் உச்ச நீதிமன்ற வழக்குகள் சென்னையில் நடக்கும். இது சென்னையை தென்னிந்தியாவின் "லீகல் தலைநகராக" மாற்றும். உச்ச நீதிமன்ற கிளையை தென்னிந்தியாவில் சென்னை அல்லது ஹைதராபாத்தில் அமைக்கலாம் என்று 18வது கமிஷன் பரிந்துரைத்த நிலையில் சென்னையில் அமைக்க வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

வாய்ப்பு
இது சென்னைக்கு சட்ட ரீதியான முக்கியத்துவத்தை கொடுக்கும். ஆனால் இப்போதைக்கு உச்ச நீதிமன்றத்தை விரிவாக்கும் முயற்சிகள் எதுவும் செய்யப்படவில்லை. ஒருவேளை உச்ச நீதிமன்றம் விரிவாக்கப்பட்டால், சென்னையில் அதன் கிளை அமைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications