இந்த முறை தப்ப கூடாது.. உஷாராகும் ஸ்டாலின்.. பொங்கலுக்கு முன் முக்கிய உத்தரவு.. ஆஹா குட் நியூஸ்!
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ள நிலையில் இதில் முக்கியமான சில முடிவுகளை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் சிறப்பு பரிசு பொருட்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி மாதம் கொண்டாடப்பட உள்ளது. பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பாக பொங்கல் சிறப்பு தொகுப்பு வருடா வருடம் வழங்கப்பட்டு வருகிறது.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் இந்த பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் கரும்பு உட்பட மொத்தம் 20 பொருட்கள் அடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பரிசு பொருட்கள்
கடந்த வருடம் சில இடங்களில் மஞ்சள் பைகளில் இந்த பொருட்கள் வழங்கப்பட்டன. சில இடங்களில் மஞ்சள் பை தட்டுப்பாடு காரணமாக இந்த பொருட்கள் வாங்க வீட்டில் இருந்தே பைகள் எடுத்து வர அறிவுறுத்தப்பட்டது. ஏலக்காய், பாசிப்பருப்பு, மிளகு, புளி, நெய், வெல்லம், முந்திரி, திராட்சை, கடுகு, சீரகம், கடலைப் பருப்பு, பச்சரிசி, முழு கரும்பு, ரவை, கோதுமை மாவு, உளுத்தம் பருப்பு, உப்பு உள்ளிட்ட பொருட்கள் இந்த தொகுப்பில் வழங்கப்பட்டது.

விமர்சனம்
இந்த நிலையில் கடந்த வருடம் அரசு மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்க வேண்டும், மக்களிடம் வரவேற்பை பெற வேண்டும் என்று திட்டமிட்டு முறையாக பொங்கல் தொகுப்பை வழங்கி இருந்தாலும் கூட சில இடங்களில் இந்த பொங்கல் தொகுப்பு மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அதன்படி முதலில் பொங்கல் தொகுப்பில் சில இடங்களில் பொருட்கள் தரமற்று இருந்ததாக புகார்கள் வைக்கப்பட்டது. அதேபோல் சில இடங்களில் வெல்லம் மோசமான நிலையில் காணப்பட்டதாகவும் புகார்கள் வைக்கப்பட்டன. புளியில் பல்லி, ஊசி போன்ற பொருட்கள் இருந்ததாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இதில் அரசை விமர்சிக்க வேண்டும் என்று சில தவறான வதந்திகள் பரப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அப்செட்
இந்த நிலையில்தான் பொங்கல் தொகுப்பு குறித்து புகார்கள் வைக்கப்படுவதால் முதல்வர் தரப்பு அப்செட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வடஇந்திய நிறுவனங்களிடம் வாங்கப்பட்டதாக புகார் வைக்கப்பட்டது. கடந்த வருடம் இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் இருந்து இந்தி எழுத்துக்களால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இதை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர். இன்னொரு பக்கம் தமிழ்நாட்டு நிறுவனங்களிடம் வாங்காமல் பிற மாநில நிறுவனங்களிடம் வாங்கியது ஏன் என்றும் புகார்கள் வைக்கப்பட்டன.

டெண்டர்
ஆனால் இதுவும் கூட குறைந்த விலையில் டெண்டர் எடுத்த நிறுவனத்திற்கு டெண்டர் கொடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கமாக அளிக்கப்பட்டது.பொங்கல் தொகுப்பு பற்றி புகார் வைக்கப்பட்டதால்தான் பொங்கல் நேரத்தில் முதல்வர் கூட நேரடியாக சென்று ரேஷன் கடைகளில் ஆய்வு செய்தார். ஆனாலும் சில இடங்களில் பொருட்கள் தரமற்று இருந்துள்ளது. கடைசி கட்டமாக வழங்கப்பட்ட பொருட்கள்தான் இப்படி தரமற்று இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இந்த பொருட்கள் சில சொதப்பியது ஏன்? அதிகாரிகள் இதை கவனிக்காதது ஏன் என்று முதல்வர் ஸ்டாலின் விசாரணை நடத்தி அப்போதே இந்த நிறுவனங்களை பிளாக் லிஸ்ட் செய்ய உத்தரவிட்டார். .

தரமான பொருட்கள்
இந்த நிலையில்தான் நாளை அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் பொங்கல் பரிசு பொருட்கள் பற்றி ஆலோசனை செய்யப்பட உள்ளது. மொத்தம் 3 விஷயங்கள் இதில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. 1 முதல் விஷயம்.. பொங்கலுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்களின் எண்ணிக்கையை உயர்த்துவது பற்றி ஆலோசனை. 2வது விஷயம் , இந்த பொருட்களை வாங்கும் நிறுவனங்கள் பற்றி ஏற்கனவே தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அந்த நிறுவனங்கள் பற்றி ஆலோசனை செய்து இறுதி செய்வது. 3வது விஷயம் இந்த பொருட்கள் வந்த பின் அவற்றை சோதனை செய்து, அதன் தரத்தை பரிசோதனை செய்து அதன்பின் வாங்குவது ஆகிய 3 விஷயங்கள் பற்றி ஆலோசனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

ஆலோசனை
அதன்படி இந்த முறை தவறு நடக்க கூடாது. தரமான பொருட்கள் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். அதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் நாளை பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழ்நாடு அரசு பொங்கலுக்கு வேட்டி, சேலை வழங்க உள்ளது. இதற்காக தமிழக நெசவாளர்களிடம் பொருட்கள் வாங்கப்பட்டு உள்ளன. அதேபோல் தமிழ்நாடு விவசாயிகளிடம் இருந்து பொங்கலுக்கான சிறப்பு தொகுப்பு மளிகை சாமான்களை வாங்க அரசு ஆலோசனை செய்யும் என்றும் நாளை எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications