சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்.. பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் ஆசையை நிறைவேற்றினார்!
சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பார்க்க வேண்டும் என 90 வது பிறந்தநாள் கொண்டாடும் நடிகை எம்.என்.ராஜம் ஆசைப்பட்ட நிலையில், அவரது ஆசையை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார்.
பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம். 1950 முதல் 1960களின் இறுதி வரை முன்னணி நடிகையாக இருந்தவர். ரத்தக்கண்ணீர், பெண்ணின் பெருமை, புதையல், தங்கப்பதுமை, நாடோடி மன்னன், பாசமலர், தாலி பாக்கியம், அலிபாபாவும் 40 திருடர்களும், அரங்கேற்றம் பல படங்களில் நடித்துள்ளார்.

200க்கும் அதிகமான திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த எம்.என்.ராஜம், தற்போது அடையாறில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவரது 90வது பிறந்தநாளை அவரது குடும்பத்தினர் எளிமையாக கொண்டாடினர். மகன், மகள், பேரன், பேத்தி, கொள்ளு பேரன், பேத்திகளுடன் பிறந்தநாள் கொண்டாடினார்.
இந்நிலையில், நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார் பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம். இந்நிலையில், பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்தின் விருப்பத்தை நிறைவேற்றி உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின், தனது மனைவி துர்காவோடு, பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்தின் அடையாறு இல்லத்துக்கு நேரில் சென்று அவரைப் பார்த்துப் பேசியுள்ளார். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதுதொடர்பாக தமிழக அரசின் எக்ஸ் தள பக்கத்தில், "பழம்பெரும் நடிகை திருமதி எம்.என். ராஜம் அவர்கள் தனது 90-வது பிறந்தநாளையொட்டி நாளிதழுக்கு அளித்த பேட்டியில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்திக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார்.
அவரது விருப்பத்தை நிறைவேற்றிடும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, அடையாறிலுள்ள பழம்பெரும் நடிகை திருமதி எம்.என். ராஜம் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துப் பேசினார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications