SIR பணிகளுக்கு எதிர்ப்பு.. நவ.2ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்.. திமுக கூட்டணி கட்சிகள் அழைப்பு
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. முடிவில் வரும் நவம்பர் 2 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் SIR எனப்படும் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் நாளை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணி மேற்கொள்ள பிரதான எதிர்க்கட்சியான அதிமுக முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

அதேவேளையில், ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வாக்காளர் திருத்தப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி அறிவித்த சிறிது நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் கட்சியின் கே.வி. தங்கபாலு, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த கே. பாலகிருஷ்ணன், முத்தரசன், மு. வீரபாண்டியன், விசிகவைச் சேர்ந்த ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் விவகாரத்தில் எடுக்கப்பட வேண்டிய சட்டரீதியான நடவடிக்கைகள் உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக அனைத்து கட்சி கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என முடிவு எடுக்கப்பட்டது. வரும் நவம்பர் 2 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications