சீ இதுதான் பிரச்சினையே..ராமதாஸ் கேள்வியால் சீரிய ஸ்டாலின்! வன்னியர் இட ஒதுக்கீடும்..அதானி விவகாரமும்
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியது அக்கட்சியினரை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக ராமதாஸ் ஒரு நிகழ்ச்சியை புறக்கணித்ததாகவும், இதன் காரணமாகவே முதல்வர் ஸ்டாலின் அப்படி பேசியதாக பாமக வட்டாரங்கள் கூறுகின்றன.
நேற்று, சென்னை எழில் நகரில் நமக்கு நாமே திட்டத்தில் 5 வகுப்பறைகளுடன் சீரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடத்தில் அமைந்துள்ள மாண்டிசேரி மழலையர் வகுப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வரிடம், அதானி ஊழல் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை கொடுத்து உள்ளாரே, அதற்கு உங்களின் பதில் என்ன என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அளித்த தமிழக முதலமைச்சர், "பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை" என கூறிவிட்டு சென்றார். இந்நிலையில் முதல்வரின் பேச்சு பாமகவினரை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும், முதல்வரின் பேச்சுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான ராமதாஸை முதலமைச்சர் விமர்சித்து பேசியது தவறு என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கூறி வருகின்றனர். மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் அவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இட ஒதுக்கீடு தொடர்பாக ராமதாஸ் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் அதன் காரணமாகவே கோபமாக பேசியதாக கூறுகின்றனர் பாமகவினர். இது தொடர்பாக விசாரித்த போது, விழுப்புரம் மாவட்டம் வலுதரெட்டியில் 21 சமூகநீதி போராளிகளுக்கான மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 29ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதில் கலந்து கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாசுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி கூறியிருந்தார்.
இதற்கிடையே கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்ட நிலையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு அதனை நீதிமன்றம் ரத்து செய்தது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு உரிய முறையில் வழக்காடவில்லை, மீண்டும் 10.5% இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார். இதன் காரணமாக திமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் இட ஒதுக்கீடு கோரிக்கையை கைவிட்டு விட்டு திமுக அரசு நிகழ்ச்சியில் எப்படி கலந்து கொள்ளலாம் என சொந்த கட்சியினர் கேள்வி எழுப்ப வாய்ப்பு இருக்கிறது.
மேலும் இதை வைத்து திமுகவும் அரசியல் செய்ய வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாகத்தான் இட ஒதுக்கீடு தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் அதற்கு பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என ராமதாஸ் கூறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உலக அளவில் அதானி குறித்த விவகாரம் பெரிதான நிலையில் முதல்வர் ஸ்டாலின் அதானியை சந்தித்தது ஏன் என கேள்வி எழுப்பி அறிக்கை மூலம் நெருக்கடி கொடுத்தார் ராமதாஸ். மணிமண்டபம் திறப்பு விழாவிற்கும் வரவில்லை, வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாகவும் நெருக்கடி கொடுத்து வருகிறார், மேலும் அதானி விவகாரத்தையும் பெரிதாக்குகிறார் என்ற கோபத்திலேயே முதல்வர் ஸ்டாலின் அப்படி பேசி இருக்கிறார் என கூறுகின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர்.












Click it and Unblock the Notifications