ரூ.6000 வெள்ள நிவாரணம்.. சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்! எந்தெந்த பகுதிகள்?
சென்னை: மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரண தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தினங்களில் வீசிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால் பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் மிக்ஜாம் புயல் வெள்ளம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.6000 ரொக்கமாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த நிவாரணத் தொகை சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலமாக ரொக்கமாக வழங்கப்படும் என்றும், இதற்கான டோக்கன்களை முன்னதாகவே கூட்டுறவுத் துறை மூலம் வழங்கப்படும் எனவும், வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் ஒன்றிய மற்றும் மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் உயர் அலுவலர்களைப் பொருத்த வரையில், அவர்கள் தங்களின் பாதிப்பு விபரங்களையும், வங்கி கணக்கு விபரம் ஆகியவற்றை தெரிவித்து நிவாரணத் தொகையினை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
சென்னை மாவட்டத்தின் அனைத்து வட்டங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும், மற்றும் திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்கள் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரையின்படி இந்த நிவாரணம் வழங்கப்படும் பகுதிகள் தேர்வு செய்யப்பட்டன.
இந்த புயல் மற்றும் அதி கனமழை காரணமாக சில பகுதிகளில் ATM மையங்கள் இயங்காததாலும், பயனாளர்களின் வங்கிக் கணக்கு எண்களை சேகரித்து நிவாரணம் வழங்க காலதாமதம் ஆகும் என்பதாலும், மேலும் பாதிக்கப்பட்ட பலர் தங்களது ATM அட்டை, வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை இழந்திருக்கக்கூடும் என்பதாலும், அவர்களுக்கு உடனடியாக பயனளிக்கும் வகையில் நிவாரணத்தொகை ரொக்கமாக வழங்கலாம் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதாக அரசு அறிவித்தது.
#WATCH | Tamil Nadu Chief Minister MK Stalin distributes relief funds to families affected by cyclone Michaung in Chennai. pic.twitter.com/R3fNp4dFhr
— ANI (@ANI) December 17, 2023
2 நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து துணிமணிகள் / பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் இழந்த குடும்பங்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக டோக்கன் வழங்கப்பட்டது. இந்த மழை வெள்ளத்தால் மத்திய, மாநில அரசு / மற்ற பொதுத்துறை நிறுவன உயர் அலுவலர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோர் மற்றும் சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள், தங்களது வாழ்வாதாரம் பாதிப்பு/ துணி, பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் இழப்பு ஏற்பட்டிருந்தால், பாதிப்பு விபரங்களை தங்களது வங்கி கணக்கு விவரத்துடன் தங்கள் பகுதிக்குரிய நியாயவிலைக் கடைகளில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்தது.
அவர்களின் விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு அதனடிப்படையில் உரிய நிவாரணம் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும் என்று அரசு தெரிவித்தது. இதற்கு தேவையான அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளிலேயே தேவையான அளவு வைத்திட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் கேட்டுக்கொண்டது.
நிவாரணத்தொகை வழங்குவது தொடர்பாக, நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு தேவையான பயிற்சியும் வழங்கப்பட்டது. அனைத்தும் தயார் நிலையில் உள்ளதை அடுத்து இந்த திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். வெள்ளத்தால் பெரும் பாதிப்பை எதிர்கொண்ட சென்னை வேளச்சேரி அஷ்டலட்சுமி நகரில் முதலமைச்சர் ரூ.6000 ரொக்கப் பணத்தை பயனாளர்களுக்கு வழங்கினார்.












Click it and Unblock the Notifications