ஜரூராக லோக்சபா தேர்தல் பணிகள்-தேர்தல் அறிக்கைக்கு 4,000 கோரிக்கைகள்-மா.செ.க்கள் கூட்டத்தில் ஸ்டாலின்
சென்னை: லோக்சபா தேர்தல் பணிகளில் திமுகவினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுக்கு 4,000-க்கும் அதிகமான கோரிக்கைகள் வந்துள்ளதாகவும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சித் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
லோக்சபா தேர்தல் தேதி வரும் மார்ச் 8,9-ந் தேதிக்குப் பிறகு அறிவிக்கப்பட உள்ளது. லோக்சபா தேர்தலை நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் தயார் நிலையில் உள்ளது.

லோக்சபா தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று தமிழ்நாடு வருகை தருகிறார். தமிழ்நாட்டில் தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்துவார்.
லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயார் நிலையில் உள்ளன. தமிழ்நாட்டில் திமுக, தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தொகுதிப் பங்கீட்டு குழு உள்ளிட்டவைகளை அமைத்தது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக, கொமதேக, முஸ்லிம் லீக் உள்ளிட்டவை தங்களுக்கான தொகுதிகள் எண்ணிக்கை, அடையாளம் காணப்பட்ட தொகுதிகள் விவரங்களை திமுகவிடம் கொடுத்துள்ளது. திமுகவும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தியது. திமுகவின் தேர்தல் அறிக்கை குழுவும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆலோசனைகளைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. திமுகவின் மாவட்ட செயலாளர்களுடன் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், லோக்சபா தேர்தல் பணிகள் முழு வீச்சில் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதிமுக, பாஜகவுக்கு எதிரான பிரசாரங்களை மக்களிடத்தில் அதிவேகமாக திமுகவினர் கொண்டு சேர்க்க வேண்டும். திமுகவின் அடிமட்டத் தொண்டனுடைய உழைப்பு வரை எனக்கு தெரிந்து கொண்டுதான் இருக்கிறது. லோக்சபா தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுக்கு இதுவரை 4,000-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் வந்து குவிந்துள்ளன என்றார். இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications