ஸ்பெயின் பயணம் சக்சஸ்.. பல ஆயிரம் கோடி முதலீடுகளுடன் வரும் ஸ்டாலின்! நாளை சென்னை திரும்புகிறார்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஸ்பெயின் பயணத்தை நிறைவுசெய்துவிட்டு நாளை சென்னை திரும்புகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்கு சென்றார். இவருடன் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவும் ஸ்பெயினுக்கு சென்று இருந்தார். ஸ்பெயின் பயணம் செல்லும் முன் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், "கடந்த இரு ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு நான் மேற்கொண்ட அரசுப் பயணங்களின் மூலம், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 7,442 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.

அதேபோல, இம்முறை ஸ்பெயின் நாட்டுக்கு நான் மேற்கொள்ளும் பயணத்திலும், பல முன்னணி நிறுவனங்களிடம் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் மனிதவளத்தை எடுத்துக்கூறி, நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் முதலீடுகளை ஈர்க்க உள்ளேன். ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் நம் இலக்கு தொலைவில் இல்லை." என்று குறிப்பிட்டு இருந்தார். அங்கு டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்சை சந்தித்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்தார்.
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அவர், தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார். "தமிழ்நாட்டின் வரலாற்றுப் பெருமையையும், தற்போது நிலவும் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலையும் ஸ்பெயின் நாட்டின் தொழில் துறையினருக்கும் அங்குச் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களுக்கும் எடுத்துரைத்தேன். எனது அமீரகம், ஜப்பான், சிங்கப்பூர் பயணங்கள், இம்மாதம் நாம் நடத்திய GIM 2024 ஆகியவற்றின் வாயிலாகத் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கியுள்ள, தொடங்கவுள்ள முன்னணி நிறுவனங்களின் பெயர்களையும் பட்டியலிட்டேன்.
நல்லாட்சி, அமைதி, திறன்மிகு மனிதவளம், எல்லையற்ற வாய்ப்புகளைக் கொண்ட தமிழ்நாட்டில் மேலும் பல குறிப்பிடத்தக்க முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நேற்றைய மாநாடு அமைந்தது." என்று குறிப்பிட்டு இருந்தார். அதை தொடர்ந்து ரோகா குழும இயக்குநர் கார்லோ வெலாஸ்கெஸ் மற்றும் ரோகோ இந்தியா நிர்வாக இயக்குநர் நிர்மல் குமாரை சந்தித்து ரூ.400 கோடி முதலீட்டை தமிழ்நாட்டுக்கு ஈர்த்ததாக ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
அதை தொடர்ந்து ஹாபாக் - லாயிடு நிறுவன நிர்வாக அதிகாரி ஜெஸ்பெர் கான்ஸ்துருப் மற்றும் அதன் இயக்குநர் ஆல்பெர்ட் லொரெண்டேவுடன் ஆலோசனை நடத்தினார் முதலமைச்சர் ஸ்டாலின். அந்த நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.2,500 கோடி முதலீடு செய்வதாக அறிவித்து இருக்கிறது. தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் தொழிற் பூங்காக்கள், கார்கோ முனையங்கள் அமைக்கப்படும் என அவர் கூறி இருக்கிறார். அங்கிருந்தபடியே தமிழ்நாடு பட்ஜெட் உள்ளிட்ட அரசு நிர்வாக பணிகள் தொடர்பாக காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த நிலையில் ஸ்பெயின் பயணத்தை நிறைவு செய்து நாளை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின். நேற்றைய தினம் கெஸ்டாம்ப், டால்கோ, எடிபன் ஆகிய ஸ்பெயின் நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர், எடிபன் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.540 கோடி முதலீடு செய்ய முன்வந்து இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். "ஸ்பெயின் பயணம் வெற்றிகரமாக நிறைவடைகிறது. முன்னணி தொழில் நிறுவன நிர்வாகிகளை சந்தித்து அலோசனை மேற்கொண்டேன்." என்று அவர் முதலமைச்சர் தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications