திருச்சி டூ திருவாரூர் செல்ல 6 மணி நேரம்... பொங்கி வழிந்தது மக்களின் பேரன்பு... ஸ்டாலின் கடிதம்..!
சென்னை: பொங்கி வழிந்த மக்களின் பேரன்பால் திருச்சியிலிருந்து திருவாரூருக்கு சென்றடைய தனக்கு 6 மணி நேரம் ஆனதாக தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
திருவாரூர் பயணம் குறித்து நெகிழ்ச்சியாக கடிதம் ஒன்றை திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியிருக்கிறார்.
அதன் விவரம் பின்வருமாறு;

முதல்முறை
உங்களில் ஒருவனாக - உடன்பிறப்புகளாம் உங்கள் அனைவரின் சார்பிலும் தான் கழகத்தின் வெற்றிக்குப் பிறகான என் முதல் பயணத்தை மேற்கொண்டேன். ஜூலை 6-ஆம் நாள் திருச்சி விமான நிலையம் சென்று, அங்கிருந்து திருவாரூரை நோக்கிப் பயணித்த போது, விமான நிலையத்திலிருந்தே கழகத்தினரும் பொதுமக்களும் பெரும் வரவேற்பளித்தனர்.

பேரன்பு
கழக நிர்வாகிகள் பலரும், நான் கேட்டுக்கொண்டபடி பொன்னாடைகள், சால்வைகள், பூமாலைகள், பூங்கொத்துகள் இவற்றைத் தவிர்த்து, புத்தகங்களைப் பரிசளித்தனர். பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை நம்பிக்கையுடன் வழங்கினர். வழிநெடுக பலதரப்பட்ட மக்களின் அன்பான வரவேற்பில் மூழ்கித் திளைத்தேன். திருச்சியிலிருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள திருவாரூருக்கு வந்து சேர்வதற்கு ஏறத்தாழ 6 மணிநேரத்திற்கு மேல் ஆனது. பயணம் முழுவதும் பொங்கி வழிந்தது மக்களின் அன்பு.. அன்பு.. பேரன்பு!

இரவு 10 மணி
பவித்திரமாணிக்கம் என்ற இடத்தில் ஒரு மாணவியும் மாணவனும் கையில் வைத்திருந்த புத்தகத்தைக் காட்டியபடி, சாலையோரம் காத்திருப்பதைக் கவனித்து, காரை நிறுத்தச் சொல்லி அவர்களை அழைந்தேன். 11-ஆம் வகுப்பு படிக்கும் சுபஸ்ரீயும் 6-ஆம் வகுப்பு படிக்கும் நிதீஷூம் தலைவர் கலைஞரின் உரையுடன் கூடிய திருக்குறள் நூலை எனக்குப் பரிசாக வழங்கினர். அந்தப் பிஞ்சு உள்ளங்களின் பேரன்பில் மகிழ்ந்தவாறு, திருவாரூர் பெரியகோவிலின் சன்னதி தெருவில் உள்ள தலைவர் கலைஞர் வளர்ந்த இல்லத்திற்கு வந்தபோது இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிட்டது. அந்த நேரத்திலும் மக்களின் அன்பான வரவேற்பில் மகிழ்ந்தேன்.

கோரிக்கை மனுக்கள்
ஜூலை-7 காலையில் திருவாரூர் தேரடியில் திரளாக நின்று வரவேற்பளித்த பொதுமக்களிடம் அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சியில் திருவாரூரில் அமைக்கப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் சிசு பராமரிப்புக்கான சிறப்புப் பிரிவைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்றேன்.

திருமணம்
பின்னவாசல் என்ற இடத்தில் ஒரு திருமண மண்டபத்தின் முன் மணக்கோலத்தில் இருவர் காத்திருக்க, என் வாகனத்தை நிறுத்தச் செய்து, "உங்கள் திருமணத்தில் நான் கலந்துகொள்ளலாமா?" என்று கேட்டேன். "நீங்கள்தான் எங்கள் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும்" என்று மணமக்கள் எஸ்.ஆர். சோப்ரா - எஸ். இரமா ஆகியோர் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்த, அவர்களின் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்துகின்ற வாய்ப்பும் அமைந்தது.

விளக்கம்
மகிழ்ச்சியான நிகழ்வுகளுடன் தலைவர் கலைஞர் அவர்கள் பிறந்த திருக்குவளை எனும் திருத்தலத்தை வந்து சேர்ந்தேன். அவர் பிறந்த இல்லத்திற்குச் சென்று, அவரது அன்பு உடன்பிறப்புகளாம் உங்கள் அனைவரின் சார்பிலும் அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினேன். அங்கிருந்த புகைப்படக் காட்சிகளைக் குடும்பத்தினருக்கு விளக்கினேன். வெறும் புகைப்படங்களா அவைகள்? வரலாற்றுத் தடங்கள்!

பரவசம்
அங்கிருந்து சென்னைக்குப் பயணமானபோது நாகை, கடலூர், விழுப்புரம் எனப் பல மாவட்டங்களிலும் கழகத்தினரும் பொதுமக்களும் அளித்த வரவேற்பில் மனநிறைவு கொண்டேன். நம்மை வழிநடத்திய தலைவர் கலைஞர் அவர்களுக்கு நாம் சூளுரைத்தபடி, கழக ஆட்சியை அமைத்து அதனை அவரது சொந்தத் திருத்தலத்தில் காணிக்கையாக்கிய பெருமிதத்தை அவரது அன்பு உடன்பிறப்புகளாம் உங்களிடம் பகிர்ந்து பரவசம் கொள்கிறேன்!












Click it and Unblock the Notifications