“இது டெல்லி அணிக்கு எதிரான ஓரணி.. எடப்பாடி தமிழ்நாடு பக்கம் இல்ல.. டெல்லி பக்கம்” - ஸ்டாலின் ட்வீட்!
சென்னை: தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழ்நாட்டை மத்திய அரசு பழிவாங்குகிறது என்றும், எடப்பாடி பழனிசாமியும் அவரது கட்சியும் டெல்லியுடன் நிற்கிறார்கள், தமிழ்நாட்டுடன் அல்ல என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
"நாம் ஒன்றாக எழுகிறோம் - இது ஓரணி vs டெல்லி அணி. நமது மண், மொழி, மானம் பாதுகாக்க ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் சேருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

உலக மக்கள் தொகை தினமான இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உலக மக்கள்தொகை தினத்தன்று , மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல்:
* மக்கள்தொகை கட்டுப்பாட்டில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.
* பெண்களுக்கு கண்ணியத்துடன் அதிகாரம் அளிக்கிறது,
* அனைவருக்கும் சுகாதாரம் மற்றும் கல்வியை வழங்குகிறது.
* நிலையான வளர்ச்சிக்கான சாம்பியன்கள்.
ஆனாலும், நமக்கு என்ன ஈடாகக் கிடைக்கிறது? குறைவான இடங்கள். குறைவான நிதி. நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்படும் குரல்.
ஏன்? ஏனென்றால் தமிழ்நாடு சரியானதைச் செய்தது. அது டெல்லியை அச்சுறுத்துகிறது.
தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழ்நாட்டை பழிவாங்குகிறது மத்திய அரசு. இன்னும் மோசமானது, எடப்பாடி பழனிசாமியும் அவரது கட்சியும் தமிழ்நாட்டுடன் அல்ல, டெல்லியுடன் நிற்கிறார்கள். அவர்கள் நமது முன்னேற்றத்திற்காக நம்மைத் தண்டிக்கும் நியாயமற்ற எல்லை நிர்ணயத்தை ஆதரிக்கிறார்கள்.
ஆனால் நான் தெளிவாகச் சொல்கிறேன்.. தமிழ்நாடு தலைவணங்காது. நாம் ஒன்றாக எழுகிறோம் - இது ஓரணி vs டெல்லி அணி. #ஓரணியில்_தமிழ்நாடு முன்னெடுப்பில் சேருங்கள். நமது மண், மொழி, மானம் பாதுகாக்க" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுவரையறை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இப்படிச் செய்தால், மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகள் எண்ணிக்கை குறையும் எனவும், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம் உள்ளது எனவும் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதற்கிடையே, 2026 சட்டசபை தேர்தலையொட்டி, 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்துள்ளது திமுக. தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் வீடு வீடாகச் சென்று பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் சேர அழைப்பு விடுத்துள்ளார் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications