ஒரு ரூபாய்கூட பேரிடர் நிதி தரவில்லையா மோடி?திமுக V/s பாஜக வெளியிட்ட ஆதாரங்கள்!
சென்னை: வரலாறு காணாத வகையில் தமிழ்நாட்டில் இந்த மாதம் அதிதீவிர கனமழை பெய்துள்ளது. இதனால் முதலில் சென்னையைச் சுற்றி உள்ள 4 மாவட்டங்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டன. அதனை அடுத்து தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட4 மாவட்டங்கள் மிகப் பெரிய சேதத்தைச் சந்தித்துள்ளனர்.
இந்த வெள்ள நிவாரணத்திலும் கூட திமுக V/s பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே மிகக்கடுமையான சர்ச்சை போர் வெடித்துள்ளது. இதனிடையே தமிழ்நாடு அரசு வெள்ள நிவாரண பணிகள் குறித்து ஆளுநர் ரவி, எதிரான கருத்துகளை முன்வைத்திருந்தார்.

இந்தச் சர்ச்சையில் அதிகமாக முன்வைக்கப்பட்டது கருத்து என்னவென்றால், பிரதமர் மோடி வெள்ள நிவாரண நிதியை ஒதுக்காமல் தமிழ்நாட்டை வஞ்சித்துவருகிறார் என்பதைத்தான். அதற்கு ஆதாரமான திமுக தரப்பில் சில விளக்கங்களை முன்வைத்து திமுக செய்தி தொடர்பாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி, அவரது எக்ஸ் தளத்தில் ஒரு காணொளியைப் பகிர்ந்திருந்தார்.
அதில், "குஜராத்துக்கு அள்ளி கொடுக்கும் மோடி, தமிழ்நாட்டைக் கண்டுகொள்ளாதது ஏன் ?" என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார். மேலும், அவர் "தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள இந்தப் பேரிடருக்கு உதவுவதற்கான முன்பாக 3 வாய்ப்புகள் பிரதமர் மோடிக்கு உள்ளன. முதல் வாய்ப்பு, Prime Minister's National Relief Fund. இரண்டாவது வாய்ப்பு, PMCARES. மூன்றாவது வாய்ப்பு, National Disaster Response Force. இந்த மூன்று நிதியிலிருந்தும் தமிழ்நாட்டிற்கு ஒரு பைசா கூட பிரதமர் வழங்காதது ஏன் ?
PMNRF நிதியை எல்லோருக்கும் கொண்டுபோய் மோடி கொடுப்பார். 2022இல் குஜராத்தில் சுவர் இடிந்துவிழுந்தது. அதில் இறந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் கொண்டுபோய் கொடுத்தார்.

அதேபோல மோர்பி பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டது. அதில் இறந்தவர்களுக்கு 2லட்சம் ரூபாய் என்று அறிவித்தார்.
மகாராஷ்டிராவில் உள்ள புல்தானா பேருந்து விபத்து நடந்தது. இதில் இறந்தவர்களுக்கு PMNRF நிதியிலிருந்து 2 லட்ச ரூபாய் அறிவித்தார்.
குஜராத்தில் 2021 மே மாதம் குஜராத்தை டாக்டே என்ற ஒரு புயல் தாக்கியது. இது இந்தச் சம்பவம் நடந்த இரண்டாம் நாளே, பாதிப்புக்குள்ளான இடங்களை எல்லாம் சுற்றிப் பார்வையிட்ட பிரதமர் மோடி ஆயிரம் கோடி ரூபாயை அந்த மாநிலத்திற்கு வழங்கினார். அதில் இறந்தவருக்கும் 2 லட்சம் ரூபாய் இழப்பீட்டை அறிவித்தார்.
ஆனால், இந்த நிமிடம் வரை பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரவும் இல்லை. PMNRF நிதியிலிருந்து தமிழ்நாட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு ரூபாயைக் கூட ஒதுக்கவும் இல்லை.
சரி, PMNRF பணம் இல்லையா? என்று கேட்டால், அப்படி கிடையாது. Prime Minister's National Relief Fund அதிகாரப்பூர்வமான அறிக்கையை நான் இப்போது வைத்திருக்கிறேன். காங்கிரஸ் ஆட்சியிலிருந்த காலகட்டமான 2012-13 ஆண்டுகளில் 86% நிவாரணத்தைத் தமிழ்நாட்டிற்கு வழங்கி இருக்கிறார்கள். அதைப்போல் 2013-14இல் 50% நிவாரண நிதியைத் தமிழ்நாட்டிற்குத் தந்துள்ளார்கள்.

ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 2014 முதல் 2022 வரை 5661 கோடி வசூல் செய்த பணத்தில், 2116 கோடி ரூபாய்தான் கொடுத்திருக்கிறார் மோடி. அதாவது வெறும் 37% நிதியைத்தான் கொடுத்திருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார் சூர்யா
2021-22 கணக்கின்படி 5556.83கோடி PMNRF நிதியில் மீதம் இருக்கிறது. அதிலிருந்து ஏன் தமிழ்நாட்டிற்கு நிதியை வழங்கவில்லை மோடி? ஏனென்றால், தமிழ்நாட்டின் மீது அவருக்கு அக்கறை இல்லை. PMCARES நிதியிலிருந்து எடுத்துக் கொடுக்கலாமே? கொடுக்கமாட்டார். ஏனென்றால், தமிழ்நாட்டின் மீது அவருக்கு அக்கறை இல்லை.
அடுத்ததாக 15வது நிதி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையைப் பாருங்கள். இந்த ஆணையம் NDRF க்கு 54,776 கோடியை நிதியை 5 ஆண்டுகளுக்கு ஒதுக்கி உள்ளது. அந்த நிதியிலிருந்து எடுத்துக் கொடுக்கலாமே? கொடுக்கமாட்டார். ஏனென்றால், தமிழ்நாட்டின் மீது அவருக்கு அக்கறை இல்லை" என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக பாஜக ஆதரவு தளமான Only Truth என்ற எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் #FactCheck "குஜராத்துக்கு அள்ளி கொடுக்கும் மோடி, தமிழ்நாட்டைக் கண்டுகொள்ளாதது ஏன் ? " எனப் போலி செய்தி பரப்பும் திமுக செய்தி தொடர்பாளர் ..
உண்மை என்ன ?...
SDRF + NDRF நிதி ஒதுக்கீடு -
தமிழ்நாடு ( 2014-2022) = 9147 கோடிகள்
SDRF + NDRF நிதி ஒதுக்கீடு -
குஜராத் (2014-2022)=6495 கோடிகள் ..
மோடி அள்ளி கொடுத்தது தமிழகத்திற்குத் தான் ..
குறிப்பு : திமுக+காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மத்திய அரசிலிருந்த போது (2004-2014)
தமிழ்நாட்டிற்கு SDRF + NDRF நிதி ஒதுக்கீடு = 4764 கோடிகள் தான்" என்று குறிப்பிட்டு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் மத்திய அரசு நிதி எவ்வளவு வழங்கியது என்பது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு விளக்கத்தை முன்வைத்துள்ளார். செய்தியாளர்கள் இது தொடர்பாக வெள்ளி நிவாரண மீட்புப் பணிகளைப் பார்வையிட அவர் வந்தபோது இந்தக் கேள்வியை முன்வைத்தனர். அதற்கு ஸ்டாலின், நல்ல கேள்வி. இதைக் கேட்பீர்கள் என்று எதிர்பார்த்திருந்தேன் என்றும் தெரிவித்தார்.
அந்தக் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர், " "இயற்கை பேரிடர்களால் ஏற்படும் செலவுகளைச் சமாளிப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கு என்று மாநில பேரிடர் நிவாரண நிதி என்று உள்ளது.

எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு நிதி வழங்கலாம் என்பதை 5 ஆண்டுகாலத்திற்கு ஒருமுறை ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் நிதிக்குழு தீர்மானிக்கும். இதன்படி தமிழ்நாட்டின் எஸ்டிஆர்எஃப் நிதிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ரூ, 1200 கோடி ஆகும்.
இதில் 75% நிதியை ஒன்றிய அரசு வழங்கும். அதாவது 900 கோடி ரூபாயை ஒன்றிய அரசு வழங்கவேண்டும். 25% தமிழ்நாடு அரசு வழங்கும். அதாவது 300 கோடி ரூபாயை மாநில அரசு ஏற்கும். ஒன்றிய அரசின் பங்குத் தொகையானது ஆண்டு தோறும் இரண்டு தவணைகளில் நமக்கு வழங்கப்படும். அதாவது தலா 450 கோடி ரூபாய்.
இயற்கை பேரிடரின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது எஸ்டிஆர்எஃப் நிதி போதவில்லை என்றால், அந்தப் பேரிடரை கடும் இயற்கை பேரிடராக அறிவித்து தேசிய பேரிடர் நிதியிலிருந்து ( NDRF) கூடுதல் நிதியானது ஒதுக்கப்படும்.

சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தையும் தற்போது தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளச்சேதத்தையும் தேசிய பேரிடராக அறிவித்து NDRF நிதியிலிருந்து கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியைக் கேட்டுக் கொண்டோம்.
ஆனால், இப்போதுவரை இந்த இரண்டு பேரிடர்களும் தேசிய பேரிடராக அறிவிக்கப்படவில்லை. NDRF நிதியிலிருந்து எந்தக் கூடுதல் நிதியும் வழங்கப்படவில்லை. ஒன்றிய அரசிடம் இருந்து நமக்கு அளிக்கப்பட்டுள்ள 450 கோடி ரூபாய் நிதியும் என்பது மாநில அரசுக்கு ஒன்றிய அரசு வழங்க SDRF இரண்டாவது தவணை நிதிதானே தவிர, கூடுதல் நிதி அல்ல" என்று திட்டவட்டமான ஒரு தகவலை முன்வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications